போராட்டத்தைக் கைவிட்ட பௌத்த பிக்குகள்: நீதிமன்ற உத்தரவை அடுத்து கூடாரங்கள் அகற்றம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணப் பேரணியில் இணைந்த பௌத்த பிக்குகள் மற்றும் ஆதரவாளர்கள், கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுத்து வந்த போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.
சிறைவாசம் அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நீண்ட நடைபயணப் பேரணி கடந்த சில தினங்களாக இடம்பெற்று வந்தது.
இந்தப் பேரணியில் இணைந்த தேரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒரு பகுதியினர், நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் ஒன்றுகூடி தற்காலிகக் கூடாரங்களை அமைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனப் பொலிஸாரால் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தது.
அதனைத் தொடர்ந்து, குறித்த நீதிமன்ற உத்தரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களுக்குப் படித்துக் காண்பிக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதை அடுத்து, காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை அவர்கள் அகற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து பௌத்த பிக்குகளும் அங்கிருந்து முழுமையாக வெளியேறியுள்ளனர்.
தற்போது அவர்கள் பௌத்தசாசன, மத மற்றும் கலாபூர்வ விவகாரங்கள் அமைச்சில் நடைபெறும் விசேட கூட்டமொன்றில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

