“எமது அரசாங்கத்தின் கீழ் இனவாதம் மற்றும் மதவாத்திற்கு எவ்வித இடமும் இல்லை” – பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவிப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்றைய தினம் (13) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்ததாவது:
“பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்திற்குப் பதிலாக மக்கள் நலன் சார்ந்த புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம் என அரசியல் மேடைகளில் மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்திருந்தோம். அந்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
அதேபோல், பொருளாதாரத்தை சரியான முறையில் மேலாண்மை செய்வோம் என்ற வாக்குறுதியையும் வழங்கியிருந்தோம்.
கடந்த காலத்தில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, ஐந்து வருட காலத்திற்குத் தங்கள் குழுவின் தேவைக்கேற்பவே செயற்பட்டார்கள். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வெவ்வேறு குழுக்கள் ஒப்பந்தங்கள் மூலம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டன.
ஆனால், இன்றைய மக்கள் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. யார் என்றாலும் சட்டத்திற்கு மேலாக இருக்க முடியாது.
இன்று வரை ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்ட அரசியல் குழுக்கள் கூட ஒன்றுபட்டு வருகின்றன. முன்னர் பிரிந்து நின்ற சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க போன்ற அரசியல் தலைவர்கள் கூட இன்று ஒரே மேடையில் நிற்கிறார்கள்.
பாம்பும் கீரியும் ஒரே மரக்கட்டையில் அடித்துச் செல்லப்படுவது போல் இவர்கள் இன்று இணைந்துள்ளனர். முன்னர் அதிகாரத்தைப் பெறுவதற்காக எதிரெதிர் குழுக்களாக இருந்து அப்பாவி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றார்கள்.
அன்று ஒருவருக்கொருவர் எதிராகப் பேசியவர்கள் இன்று ஒன்று சேர்ந்து செயற்படும் நிலையைக் காண முடிகிறது.
தற்போது அவர்கள் இனம் மற்றும் மதத்தை முன்னிறுத்தி மீண்டும் அரசியல் ரீதியாக எழுச்சி பெற முயல்கிறார்கள். ஆனால் இலங்கையின் அனைத்து இன, மத மக்களும் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.
எனவே, எங்களது அரசாங்கத்தின் கீழ் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எவ்வித இடமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

