களுத்துறை உணவகத்தில் T-56 துப்பாக்கிச் சூடு: உரிமையாளர் பலி; மனைவி படுகாயம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்று (09) காலை களுத்துறை நாகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் உணவகம் ஒன்றின் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
படுகாயமடைந்த மனைவி சிகிச்சைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு, பிரிவுக் குற்றப் புலனாய்வு அலகு, சம்பவ இடத்தைப் பார்வையிடும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் தெற்கு களுத்துறை தலைமையகப் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

