முன்னாள் முதன்மைப் பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிரான்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்று காலை கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ஷிரான்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவரிடம் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, திங்கள்கிழமை இரவு (05) இலங்கை திரும்பிய ஷிரான்தி ராஜபக்ஷவை, ஓக்டோபர் 13 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் முதன்மைப் பெண்மணி மலேசியாவிலிருந்து வந்த விமானம் மூலம் நாட்டிற்குத் திரும்பியிருந்தார்.
சிகிச்சைக்காக அவர் செப்டம்பர் 16 ஆம் திகதி அதிகாலை சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
செப்டம்பர் 15 ஆம் திகதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் நிதி விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்பில், தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, ஷிரான்தி ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளால் திங்கள்கிழமை (05) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

