கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ஞானசார தேரர்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது எஞ்சிய சிறைத்தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் கைதிகளுக்கான வெள்ளை நிற சீருடையில் கொழும்பு மேல் நீதிமன்ற பிடியாணைத் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நிலுவையிலுள்ள பிடியாணை உத்தரவின் அடிப்படையிலேயே ஞானசார தேரர் நீதிபதி முன்னிலையில் இவ்வாறு இன்றைய தினம் (06) ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக, ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரிலேயே ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையைத் தொடர்ந்து, எஞ்சிய தண்டனைக் காலத்தை அனுபவிப்பதற்காகவே அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

