கொழும்பில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் பெட்ரோல் நிரப்பிவிட்டு வந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பல்: தும்முல்லை சந்தியில் பரபரப்பு!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலைக்கிடையில், பெட்ரோல் நிரப்பிவிட்டு வந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தானாக தீப்பிடித்து எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் கொழும்பு 4, தும்முல்லை சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் நிரப்பிவிட்டு வந்த சிறிது நேரத்திலேயே முச்சக்கர வண்டியில் இருந்து திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், தீயணைப்புப் படையினர் தீயை அணைப்பதற்குள் முச்சக்கர வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகியது.

இவ்விபத்தின் போது எவருக்கும் எவ்வித காயங்களோ அல்லது தீக்காயங்களோ ஏற்படவில்லை எனச் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.