“நான் நாட்டுக்காகவே பணியாற்றினேன்; உண்மைக்காக குரல் கொடுக்க அஞ்சமாட்டேன்” – கலபடஅத்தே ஞானசார தேரர்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்காக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்றைய தினம் (05) மீண்டும் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கலபடஅத்தே ஞானசார தேரர், தாம் நாட்டுக்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவுமே தொடர்ச்சியாகப் பணியாற்றியதாக நீதிமன்ற வாசலில் வைத்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுகளுக்குத் தாம் எப்போதும் மதிப்பளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாம் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் சுயநலமின்றி நாட்டின் நன்மைக்காகவும் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவுமே செய்யப்பட்டவை எனக் கூறினார்.
கடந்த 25 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்புக்காகவும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் தாம் குரல் கொடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் உள்ள தீவிரவாதத் திட்டங்கள் குறித்து தாம் 2014 ஆம் ஆண்டிலிருந்தே பகிரங்கமாக எச்சரித்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.
தாம் நீதிமன்றத்தைப் புறக்கணிப்பதாக எழும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் காரணமாகவே தலைமைத் துறவிகளின் வழிகாட்டுதலின்படி தியானப் பயிற்சிகளுக்காக ஆரண்யத்திற்குச் சென்றிருந்ததாகத் தெளிவுபடுத்தினார்.
உண்மைக்காகப் பேசுவதற்கோ அல்லது சிறைத் தண்டனைக்கோ தாம் என்றும் அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்த ஞானசார தேரர், மரணம் சம்பவிப்பதாக இருந்தாலும் நாட்டின் உண்மை நிலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் காரசாரமாகத் தெரிவித்தார்.
ஒரு மனிதன் என்ற ரீதியில் தமக்கு மனவேதனைகள் இருந்தாலும், நாட்டின் எதிர்காலத்திற்காகத் தொடர்ந்து நிலைநிற்பதாகக் கூறி அவர் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிச் சென்றார்.
இன்றைய வழக்கு தொடர்பான மேலதிக பின்னணி விபரங்கள்:
2016 ஆம் ஆண்டு ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், கலபடஅத்தே ஞானசார தேரருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர், 2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
எனினும், குறித்த ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அரசியல் அமைப்பிற்கு முரணானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், அண்மையில் அந்தப் பொதுமன்னிப்பை செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை நிறைவேற்றுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கேற்ப, குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


