ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் நாட்டின் தலைவர் பங்கேற்காமை குறித்து பிரேமநாத் சி தொளவத்த விமர்சனம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டின் தலைவர் சர்வதேச மாநாடுகளில், குறிப்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருவது நாட்டின் ராஜதந்திர நடவடிக்கைகளின் பலவீனத்தையே காட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொளவத்த தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், சர்வதேச ரீதியில் நாட்டின் விவகாரங்களைக் கையாள்வதற்கும், உலகத் தலைவர்களுடன் உறவுகளைப் பேணுவதற்கும் மக்கள் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுத்தனர்.
இருப்பினும், ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாட வேண்டிய முக்கிய தருணத்தில், நாட்டின் தலைவர் அதில் பங்கேற்காமல் கம்பஹாவில் தனது கட்சியின் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரானியக் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான சம்பவம் போன்ற பல முக்கிய சர்வதேசப் பிரச்சினைகள் நிலவும் இக்காலகட்டத்தில், நாட்டின் தலைவர் சர்வதேச அரங்குக்குச் சென்று உரையாடுவது அவசியமானது என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மொழித் திறமை என்பது இங்கு ஒரு தடங்கலாக இருக்க முடியாது என்றும், அதற்காக அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு உயர்மட்ட மாநாட்டுக்கு, நாட்டின் ஜனாதிபதி செல்லாமல் வெளியுறவு அமைச்சரை மட்டும் அனுப்புவது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசின் ராஜதந்திர மற்றும் வெளியுறவு அமைச்சின் செயல்பாடுகள் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை இது தெளிவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

