பத்து மாத முடக்கத்திற்குப் பின் மலையக ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்: கம்பளை வரையிலான தற்காலிக சேவைகளைத் தொடங்கியது ரயில்வே திணைக்களம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

‘டித்வா’ (Cyclone Ditwah) சூறாவளியின் பேரழிவு காரணமாகக் கடுமையான சேதங்களைச் சந்தித்து, கடந்த 10 மாதங்களாக முடங்கிக்கிடந்த மலையக ரயில் பாதை போக்குவரத்து இன்று (02) முதல் மீண்டும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.

கடந்த காலத்தில் வீசிய ‘டித்வா’ சூறாவளி மலையக ரயில் பாதையின் பல பகுதிகளில் பாரிய நிலச்சரிவுகளையும் உட்கட்டமைப்புச் சேதங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனால் கொழும்புடனான மலையகப் பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போது சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக கொழும்பில் இருந்து பேராதனை ஊடாக கம்பளை வரையிலான தற்காலிக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அமுலாக்க அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், கொழும்புக்கும் மலையகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது மலையகப் பகுதி பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதையின் ஏனைய பகுதிகளின் சீரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்ததும், பதுளை வரையிலான முழுமையான ரயில் சேவைகளும் விரைவில் கட்டம் கட்டமாக மீளமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.