உலக சிறுவர் தினம்: கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கி வைப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 01) பிறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், இன்று பிறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இலவச ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பு அடையாளப்பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையானது, இவ்வாண்டும் நாட்டின் அனைத்து முக்கிய மருத்துவமனைகளையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே நிதிப் பாதுகாப்பினை உறுதி செய்வதும், எதிர்கால திட்டமிடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.