இலங்கையில் முதன்முறையாக சர்வதேச பாம்புகள் மாநாடு!
Meiveli Media Team

இலங்கையில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சர்வதேச பாம்புகள் மாநாடு – 2026’, கண்டி கிராண்ட் கண்டியன் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.
சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்திகே தலைமை தாங்கியுள்ளார். மாநாட்டில் இலங்கை மட்டுமன்றி இந்தியாஇ பூட்டான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். பாம்பு இனங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்கள், சர்ப்பவியலாளர்கள், சுற்றாடலியலாளர்கள், பாம்பு நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைசார் அறிஞர்கள் இதில் பங்கேற்று தங்களது ஆய்வுகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இதன்போது, மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு குறைப்பது, பாம்புகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், பாம்பு விஷத்தில் காணப்படும் மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் அதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளக்கூடிய ஆய்வுகள் குறித்தும் நிபுணர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக, இயற்கைச் சூழலில் பாம்புகள் வகிக்கும் முக்கிய பங்கு, சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் அவற்றின் பங்களிப்பு மற்றும் பல்வேறு பாம்பு இனங்களைப் பாதுகாப்பதன் அவசியம் தொடர்பிலும் ஆய்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையில் காணப்படும் பாம்பு இனங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் துறைசார் நிபுணர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ, கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
மனிதர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் உயிரினமாக மட்டுமன்றி, இயற்கைச் சமநிலையின் முக்கிய அங்கமாகவும் பாம்புகளைப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த சர்வதேச மாநாடு அமைந்துள்ளது.

