ஈழத்துத் திரையுலகின் புதிய மைல்கல்: ‘போராட்டம்’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் கொழும்பில் பிரமாண்டமாக நடைபெற்றது!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

உலகத் தமிழர்களின் கலை மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான படைப்புகள் சர்வதேசத் தரத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், ஈழத்துத் திரையுலகிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக உருவாகியுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் VIP சிறப்புத் திரையிடல் (VIP Premiere Show) கொழும்பு PVR Cinemas திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
IBC Productions சார்பில் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு ஒரு இளைஞனின் கனவு, குடும்பப் பின்னணி, காதல், நட்பு மற்றும் அவர் சந்திக்கும் வாழ்வியல் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா, ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கைத் திரையலகப் பிரபலங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
திரையிடலின் முடிவில், படத்தைப் பார்த்த பிரபலங்களும் திரைத்துறை ஆர்வலர்களும் படக்குழுவினரைப் பாராட்டித் தங்களது நேர்மறையான கருத்துகளைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குநர் ராஜ் சிவராஜ் தனது முதல் முயற்சியிலேயே நேர்த்தியான திரைக்கதையாலும் கதாபாத்திரங்களை கையாண்ட விதத்தினாலும் பெரும் கவனம் ஈர்த்துள்ளார்.
கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ரீகன் கந்தையா, ஒரு சாதாரணக் குடும்பத்து இளைஞனின் வாழ்வியலை எந்தவிதப் புனைவுமின்றி இயல்பாகப் பிரதிபலித்து நம்பிக்கை அளித்துள்ளார்.
கதாநாயகி நிவேதிதா இராசையா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஒபாமா, ஆஸ்டின், காக்கா, காக்காவின் மனைவி மற்றும் வில்லன் எனப் படத்தில் வரும் அனைத்துத் துணைக்கதாபாத்திரங்களும் கதை நகர்வுக்கு மிக நேர்த்தியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக, ஏ.கே. கமலின் வண்ணமயமான ஒளிப்பதிவு ஒவ்வொரு சட்டகத்திற்கும் உயிரூட்டி, ஒட்டுமொத்தப் படத்தையும் ஒரு காட்சி விருந்தாக மாற்றியுள்ளது.
படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ள பூவன் மதீசனின் இசை, தேவையில்லாத ஆரவாரங்களின்றி காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் அளவோடு வழங்கி ரசிகர்களின் மனதைத் தொடுகிறது.
தாயக மற்றும் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகள் உலகரங்கில் நிமிர்ந்து நிற்க, பாஸ்கரன் கந்தையா அவர்களின் இத்தகைய முயற்சிகள் வலுவான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்துள்ளன.
திரையரங்குகளில் வெளியாகும் முன்பே பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ள “போராட்டம்” திரைப்படம், எதிர்வரும் அக்டோபர் 2-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.


