சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றி, அவரை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பில் இன்று (30) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், இனம், மதம், மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்களாக ஒன்றிணைந்து அனோஜனின் விடுதலைக்காகக் குரல்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் அனோஜனின் பெற்றோரைச் சந்தித்து, அவரைப் பொதுமன்னிப்பில் விடுவிப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள், அந்த இராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்க்கும் வகையிலேயே பொதுமக்கள் தளத்தில் இந்த மனிதாபிமான குரல் எழுப்பப்படுவதாகத் தெரிவித்தனர்.

சவுதி அரேபிய நாட்டின் சட்ட அமைப்பை மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரான சவுதி மன்னரிடமும் அந்நாட்டு தலைமையிடமும் மனிதாபிமான அடிப்படையில் கருணை காட்டி பொதுமன்னிப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டனர்.

அதேவேளை, நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்கள், மத ஸ்தாபனங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் அமைதியான முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம், பிரார்த்தனைகள் மற்றும் கையெழுத்து வேட்டைகளில் ஈடுபட்டு இந்த மனிதாபிமான முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அமைதியான உணவு தவிர்ப்புப் போராட்டமானது எந்தவொரு நாட்டிற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது அல்ல என்பதையும், வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக ஊடகங்களில் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் அமைப்பாளர்கள் வலியுறுத்தினர்.

கொழும்பில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் ஹரி கதிர்காமர், செயலாளர் கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம், ஒருங்கிணைப்பாளர் ராஜூ பாஸ்கரன் மற்றும் சபரிமலை குருசுவாமி ரவி குருசாமி, ஆகியோர் இங்கு உரையாற்றிய தோடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய பிரதம குரு விஜயானந்த் குருசாமி உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.