சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் தண்டனையைக் குறைத்து அவரை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

‘புலம் பெயர் வீட்டுப் பணிப்பெண்களின் உள்நாட்டு குரல்’ அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் அழைப்பாளர் உமா கரந்தகொல்ல கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சவூதி அரேபியாவின் அல்-அஹ்ஸா நீதிமன்றத் தீர்ப்பின்படி, அம்பாறை – கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

முகநூல் பதிவொன்றை அடிப்படையாகக் கொண்டு தொடரப்பட்ட இவ்வழக்கில், ஆரம்பத்தில் இவருக்கு 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அத்தண்டனைக்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டைத் தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய அடிப்படையில் இவ்விவகாரத்தைக் கருத்தில் கொண்டு, குறித்த இளைஞரின் மரண தண்டனையைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உமா கரந்தகொல்ல வலியுறுத்தினார்.

அவர் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்த ஒரு உழைப்பாளி என்றும், ஒரு இளம் உயிரைப் பாதுகாப்பது மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, இவரது தண்டனையைக்தளர்த்தி, அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வெளியுறவு அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான வழக்குத் தீர்ப்பு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அனுபவம் வாய்ந்த சுயாதீன சட்டத்தரணிகளின் உதவியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி அனோஜனை விடுவிப்பதற்கான வழிகளைச் செய்யுமாறும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.