தெமட்டகொடை களுபாலம அருகில் துப்பாக்கிச் சூடு – முச்சக்கர வண்டி சாரதி உயிரிழப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

கொழும்பு 9, தெமட்டகொடை களுபாலம பகுதிக்கு அருகில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனம் தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில், காலி – உடலமட்ட பகுதியைச் சேர்ந்த ஹவ்பே லியனகே பாலித சந்திரசிரி (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த முச்சக்கர வண்டியில் வாடகைக்கு (ஹயர்) பயணித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பயணித்த நபர் திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அறியப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடலத்தைக் கைப்பற்றி விசாரணைகளைத் தொடங்கியுள்ளதுடன், தப்பிச்சென்ற சந்தேகநபரைக் கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

