2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டி; அரசாங்கத்தின் வரிக்கொள்கை குறித்து சாகர காரியவசம் விமர்சனம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்றைய தினம் (17) கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும் அல்லது சிறையில் அடைக்கப்பட்டாலும், தாய்நாட்டைப் பாதுகாக்கும் கட்சியின் வேலைத்திட்டங்கள் தடையின்றி தொடரும் எனக் குறிப்பிட்ட அவர், 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும், அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்துப் பேசிய அவர், தற்போதைய அரசாங்கம் நாட்டின் திறைசேரியை நிரப்புவதற்கு முதலீடுகளையோ அல்லது அபிவிருத்தித் திட்டங்களையோ பயன்படுத்தாமல், பொதுமக்கள் மீது அதிக வரிகளைச் சுமத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
நாய் வரி மற்றும் தாய்ப்பாலுக்கான வரி போன்ற வரலாற்றுக் கதைகளை மேற்கோள் காட்டி, அரசாங்கம் வரிகளை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு வேடிக்கையான ஆட்சியாக மாறியுள்ளதாக விமர்சித்தார்.
மேலும், பொலன்னறுவையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் விவசாய அமைச்சரும் அவரது பிரதி அமைச்சரும் கலந்துகொள்ளாததை சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற கொள்கைகள் காரணமாக சொந்த அமைச்சர்களே ஜனாதிபதியின் திட்டங்களைப் புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் அனுராதபுரக் கூட்டத்தில் அர்ஜுனா இராமநாதன் ஆற்றிய உரை குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் இனவாதத்தையோ அல்லது பிரிவினைவாதத்தையோ ஆதரித்துப் பேசவில்லை என்றும், இனிமேல் பிரிவினைவாதத்திற்கு இடம் கொடுக்கப்போவதில்லை என்ற கருத்தையே முன் உரையாடினார் என்றும் தெளிவுபடுத்தினார்.

