சர்வதேச நிலைமைகளைப் புரிந்துகொண்டு இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக “பிரஜா சக்தி” திட்டம் உருவாக்கப்பட்டது – அமைச்சர் கலாநிதி உபாளி பன்னில

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

 

அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்ட தென் கொரியாவின் மிக முக்கியமான அபிவிருத்தி இயக்கமான ‘செமாவூல் உந்தோங்’ (Saemaul Undong) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவ் அமைப்பினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்குமான மாநாடொன்று நேற்று (15) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாளி பன்னில மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன ஆகியோரின் தலைமையில் இம்மாநாடு இடம்பெற்றது.

தென் கொரியாவின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘செமாவூல் உந்தோங்’ அமைப்பானது, தென் கொரியா இன்று அடைந்துள்ள பொருளாதார வெற்றிகளுக்குப் பெரும் பங்காற்றியுள்ள அமைப்பாகும்.

இது தென் கொரியாவின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு கிராமிய அபிவிருத்தி இயக்கம் மட்டுமன்றி, ‘க்ளோபல் செமாவூல் உந்தோங்’ (Global Saemaul Undong) ஊடாகத் தனது அனுபவங்களையும் அறிவையும் வளரும் பிற நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கமைய, 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் பல கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் காளான் வளர்ப்பு, மூட்டை கொச்சிக்காய் பயிர்ச்செய்கை மற்றும் அது தொடர்பான மதிப்புக்கூட்டப்பட்ட ஆதனங்கள், அத்துடன் ஆடை உற்பத்தி போன்ற திட்டங்களுக்காக இயந்திர உபகரணங்கள், தொழில்நுட்ப அறிவு மற்றும் சந்தை வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றில் இவ்வமைப்பு தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.