“பணியாற்ற அதிகாரம் அவசியம்”: மாகாண சபை தேர்தலில் களமிறங்க நளின் பண்டார விருப்பம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளபோதிலும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான பணிகளை திறம்பட செய்ய முடியாது என்றும், அதற்கு ஆட்சி அதிகாரம் அவசியம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு மண்டலமான பிங்கிரிய பகுதியில் 1000 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் பிரதி அமைச்சராகத் தான் ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டினார்.

தம்மிடம் வேலை செய்யக்கூடிய திறன் இருந்தபோதிலும், எதிர்க்கட்சியில் இருக்கும்போது அதிகார வரம்புகள் தடைக்கல்லாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசில் அதிகாரம் இருந்தால் மட்டுமே மக்களுக்குப் பணியாற்ற முடியும் என்றார்.

இதன் காரணமாக, மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மாகாண சபை தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெறும் மாகாண சபை உறுப்பினராக அல்லாமல், அதிகாரமிக்க மாகாண முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றி மக்களுக்குச் சேவையாற்றுவதே தனது இலக்கு என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.