உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்திற்கு மரண தண்டனை!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற ஆயம் இன்று (31 ஜூலை 2026) தீர்ப்பளித்துள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு கொடூரத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் தீவிர கடமை மீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தனித்தனியாக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டில், மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்துத் தீர்ப்பளித்திருந்தது.
இருப்பினும், மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சட்டமா அதிபர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, சாட்சியங்களை மீண்டும் அழைத்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தீர்க்கமான வழக்கு விசாரணைகளின் முடிவில், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது.
இன்றைய அமர்வில், முதலில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே இரகசிய தகவல்கள் கிடைத்தும் அதைத் தடுக்கத் தவறியமை மற்றும் தாக்குதலுக்கு மறைமுகமாக உதவி ஒத்தாசை புரிந்தமைக்காக, ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராகச் சுமத்தப்பட்ட 857 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்து அவருக்கும் மரண தண்டனை விதித்தது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் துறையின் உச்சபட்ச பொறுப்பில் இருந்த இரு உயர் அதிகாரிகளுக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

