ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்: இறுதி அஞ்சலிக்காக பிட்டகோட்டே இல்லத்தில் உடல் வைப்பு!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், நாட்டின் பிரபல தொழிலதிபருமான உபாலி தர்மதாச காலமானார்.

அவரது பௌதிக உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பிட்டகோட்டே, அதிகாரம மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் திரளானோர் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

அன்னாரின் உடல் புதன்கிழமை வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அன்றைய தினம் மாலை பொரளை பொது மயானத்தில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராகப் பணியாற்றி, நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்காகவும் சர்வதேச அளவில் இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காகவும் முக்கிய பங்காற்றியவர் உபாலி தர்மதாச ஆவார்.

அத்துடன், நவாலோக மருத்துவமனை குழுமம் உள்ளிட்ட நாட்டின் முன்னணி தொழில்நிறுவனங்களை வழிநடத்திய பெருமைக்குரிய இவர், தனது தந்தை நவாலோக தர்மதாசவின் வழியில் தொழில்துறையிலும் பெரும் முத்திரை பதித்துள்ளார்.

இலங்கையின் வணிக மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கு இவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை நினைவு கூர்ந்து, நாட்டின் பல முக்கிய தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.