சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் ஆளுகை குறித்த தேசிய சட்ட மாநாடு ஆகஸ்ட் 1-இல் கொழும்பில்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு:

தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்ட மாநாடு 2026 தொடர்பான ஊடக சந்திப்பு நேற்றைய தினம் மாலை கொழும்பில் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கலாநிதி சுனில் அபேரத்ன, இம்மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு ‘சினமன் லைஃப்’ ஹோட்டலில் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் முன்னணி நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், சட்டவேதியர்கள், அரசு பிரதிநிதிகள் மற்றும் தகவல் தொடர்பு துறை நிபுணர்கள் ஒரே மேடையில் ஒன்று கூடி டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான சட்டக் கட்டமைப்பு மற்றும் அதை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளனர்.

இந்த ஆண்டு மாநாடானது “சட்டத்தின் ஆட்சி, சைபர் பாதுகாப்பு, நெகிழ்வுத்தன்மை கொண்ட டிஜிட்டல் ஆளுகை மற்றும் டிஜிட்டல் யுகத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கான வலுவான சட்டக் கட்டமைப்பின் அவசியத் தேவை” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.

குறிப்பாக, 2025–2029 காலப்பகுதிக்கான சைபர் பாதுகாப்பு உத்திகள், அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள், ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம், தரவு பாதுகாப்பு மற்றும் வரவிருக்கும் டிஜிட்டல் பொருளாதாரச் சட்டங்கள் குறித்து இதில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

இம்மாநாடு நான்கு பிரதான அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது. முதலாவது அமர்வில் சைபர் அச்சுறுத்தல்கள், தொழில்நுட்ப முறைகள் மற்றும் நடைமுறைச் சவால்கள் குறித்து ஸ்ரீலங்கா டெலிகொம் உள்ளிட்ட நிறுவனங்களின் நிபுணர்கள் உரையாற்றுவர்.

இரண்டாவது அமர்வில் டிஜிட்டல் யுகத்தின் யதார்த்த நிலைக்கு ஏற்ப சட்டக் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட குழுவினர் உரையாற்றுவர்.

மூன்றாவது அமர்வில் நீதியை வழங்கும் செயல்முறைகளில் சைபர் பாதுகாப்பின் தாக்கம் குறித்து சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் கலந்தாலோசிப்பதுடன், நான்காவது அமர்வில் சட்ட வல்லுநர்கள், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் பங்கேற்கும் திறந்த கலந்துரையாடல் இடம்பெறும்.

மேலும், இம்மாநாட்டின் பிரதான உரையை லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இயன் வோல்டன் நிகழ்த்தவுள்ளதுடன், நிகழ்வின் போது இரண்டு முக்கிய நூல்களும் வெளியீட்டு வைக்கப்படவுள்ளன.

மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.