16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை தேவை: எம்பி ஹர்ஷண ராஜகருணா வலியுறுத்து!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, ‘இணையவழி பாதுகாப்பு சட்டத்தில்’ திருத்தம் மேற்கொள்வதற்கான தனிநபர் முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதிலும், அரசாங்கம் அது குறித்து எவ்வித கவனமும் செலுத்தாமல் அலட்சியமாகச் செயல்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம்சாட்டியுள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலக நாடுகள் முழுவதும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக சமூக ஊடகக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை இயற்றி வருகின்றன.
ஆனால், இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துகிறது. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகிய நாங்கள் இதற்கான சட்டத் திருத்தத்தை தயாரித்து நாடாளுமன்றம் மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளோம்.
எனினும், இந்த சட்டத் திருத்தம் தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்பது போல அரசாங்கம் நடந்து கொள்கிறது.
அத்துடன், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. நீதிமன்றச் செயல்பாடுகளை விரைவுபடுத்த நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதை விடுத்து, தற்போது காலியாகவுள்ள நீதியரசர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரசாங்கம் இணைந்து நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன. நீதித்துறையின் சுயாதீன தன்மையை சீர்குலைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் சங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்துக் குறிப்பிட்ட அவர், மக்களின் வாழ்க்கைச் செலவு பெருமளவில் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணம் 45 சதவீதத்தினாலும், எரிபொருள் விலை சுமார் 150 ரூபாயினாலும் அதிகரித்துள்ளதுடன், பணவீக்கமும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
இதனால் சாதாரண மக்களும் விவசாயிகளும் மிகக் கடுமையான பொருளாதார அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், ஜனாதிபதியின் ஜனரஞ்சகத்தன்மை 75 சதவீதம் என அரசாங்கம் கூறுமாயின், ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இதுவே சரியான தருணமாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களை ஏமாற்றாமல் ஜனநாயக ரீதியாக அதிகாரத்தைப் பரவலாக்க உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, நாட்டின் தற்போதைய வீழ்ச்சிக்கு பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ஷ முகாமே பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், 2029 ஆம் ஆண்டில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் பிரதான சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி விளங்கும் என்றும், நாட்டின் அடுத்த தலைவராக சஜித் பிரேமதாசவே உருவெடுப்பார் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை இணைந்து வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

