10 ஆவது தெற்காசிய கராத்தே போட்டியில் இலங்கை கடற்படையினருக்கு 5 வெண்கலப் பதக்கங்கள்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வங்கதேசத்தில் நடைபெற்ற 10 ஆவது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படை வீரர்கள் ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கும் கடற்படைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வங்கதேச கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள், டாக்கா நகரில் அமைந்துள்ள ‘Shaheed Shorawardi’ உள்ளக விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த ஏழு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று ஆண் மற்றும் பெண் வீரர்கள் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியில், ஆண்களுக்கான 50 கிலோகிராமிற்கு உட்பட்ட தனிநபர் குமிதே பிரிவில் போட்டியிட்ட லீடிங் சீமன் ஏடிஎன்எஸ் ஆரியரத்ன வெண்கலப் பதக்கமொன்றை வென்றார்.
அத்துடன், பெண்களுக்கான 61 கிலோகிராமிற்கு உட்பட்ட தனிநபர் குமிதே மற்றும் குழு குமிதே நிகழ்வுகளில் போட்டியிட்ட ஏபல் சீமன் பிஎல்எம் நெத்மினி இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தனதாக்கினார்.
மேலும், பெண்களுக்கான 68 கிலோகிராமிற்கு உட்பட்ட தனிநபர் குமிதே மற்றும் குழு குமிதே நிகழ்வுகளில் போட்டியிட்ட லீடிங் சீமன் கேஏசி துலாஞ்சலி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார்.
இவ்வெற்றிகளின் மூலம் இலங்கை கடற்படையினரின் விளையாட்டுத் திறமைகள் சர்வதேசப் போட்டித் களத்தில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றப்பட்டுள்ளது.
அத்துடன், கடற்படையில் கராத்தே விளையாட்டை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச மட்டத்திலான திறமைமிக்க வீரர்களை உருவாக்குவதற்கும் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான திட்டங்களின் வெற்றியை இச்சா சாதனை தெளிவாகப் பிரதிபலிக்கிறது.


