இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்தல்: 9 இந்திய மீனவர்கள் கைது; படகும் பறிமுதல்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) மீறி அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய ஒரு மீன்பிடிப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2026 ஜூலை 22 ஆம் திகதி மாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இரணைதீவிற்கு தெற்குப் பகுதியில் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் 50-க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்ததை இலங்கை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விரைவு நடவடிக்கையின் போது, ஒரு மீன்பிடிப் படகு சுற்றிவளைக்கப்பட்டு அதிலிருந்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


