ஆசிரியர் சேவை IIஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2026: விண்ணப்பங்கள் கோரல்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களுக்கான IIஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை எதிர்வரும் 2026 செப்டம்பர் மாதம் நடாத்தப்படவுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2026 ஜூலை 17 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் கூடுதல் செயலாளர் (நிறுவனங்கள்) திரு. ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் ஆசிரியர்கள், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து 2026 ஜூலை 20 ஆம் திகதி முதல் 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இணையவழிப் பிரவேச முறைமை (Online) மூலம் மட்டுமே தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இலங்கை ஆசிரியர் சேவையின் 2 – II தரம் உடைய, இளங்கலை கல்வியியல் பட்டத்தின் (B.Ed) அடிப்படையில் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் தவிர்ந்த, அத்தரத்திற்குப் பதவியுயர்வு பெற்ற அல்லது இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் தரத்திற்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் 2- II தரத்திற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், 2- II தரத்திலான தங்களது சேவைக்காலம் 04 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர் இவ் IIஆம் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்தல் கட்டாயமாகும்.
அத்துடன், 2025.06.30 ஆம் திகதிக்கு முன்னர் IIஆம் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்யாத போதிலும், அத்தேவையை எதிர்காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு 2 – I தரத்திற்குப் பதவியுயர்வு அளிக்கப்பட்ட ஆசிரியர்களும், ஆசிரியர் சேவையின் 1ஆம் தரத்திற்கு மேலும் பதவியுயர்வு பெற வேண்டுமாயின் இவ்வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்வது அத்தியாவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்குச் சுயகற்றல் முறைமையே பரிந்துரைக்கப்படுவதுடன், அதற்குரிய சுயகற்றல் மொடியுள்களின் பாடத்திட்டங்கள் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கல்வி அமைச்சின் e – thaksalawa உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
எனவே, பரீட்சார்த்திகள்
https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=1065 என்ற இணைய இணைப்பின் ஊடாக e – thaksalawa இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, அதில் IIஆம் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பாடவிடயங்களைக் கற்றுப் பரீட்சைக்குத் தோற்றுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

