கொழும்பு கொட்டாஞ்சேனை வட்டார District 306 D3 லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் 5ம் ஆண்டு மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் இன்று 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான சிறப்பு செயன்முறை அமர்வு மற்றும் கருத்தரங்கு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இம்மாணவர் நலன்சார் விசேட நிகழ்வு குறித்து விவேகானந்தா கல்லூரியின் அதிபர் எம். மூவேந்தன் அவர்கள் ஊடகங்களுக்குத் தனது விசேட கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய செயன்முறை அமர்வானது கொழும்பு கொட்டாஞ்சேனை வட்டார லயன்ஸ் கழகத்தின் (Lions Club of Kotahena Circle – District 306 D3) ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலையின் நீண்டகால நலன்விரும்பியும், கொழும்பு மாநகரசபை உறுப்பினரும், கொட்டாஞ்சேனை வட்டார லயன்ஸ் கழகத்தின் (District 306 D3) தலைவருமான ஆ. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு முழுமையாக ஒருங்கமைக்கப்பட்டிருந்ததோடு, இதற்குப் பக்கபலமாக லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த லயன் சேகர், லயன் ராகுல் மற்றும் லயன் நந்தினி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும், இந்த விசேட கருத்தரங்கில் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, புலமைப்பரிசில் தேர்வில் சிறந்த அனுபவமும் கைதேர்ந்த திறமையும் கொண்ட விசேட வளவாளர்களான இந்திரகுமார், தனராஜ் மற்றும் தங்கவேல் ஆகிய மூன்று சிறந்த ஆசிரியர்கள் வருகை தந்து மாணவர்களை வழிநடத்தினர்.
இதன்போது மாணவர்களுக்கான அறிவுரைகளை வழங்கிய அதிபர் எம். மூவேந்தன் அவர்கள், கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள் வெறும் வினாத்தாள்களைச் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அச்சமின்றி ஆசிரியர்களிடம் கேட்டு உடனுக்குடன் தெளிவுபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எவ்வளவுதான் மாதிரிப் பரீட்சைகளும் கருத்தரங்குகளும் நடைபெற்றாலும், இறுதிப் பரீட்சை வினாத்தாள் முற்றிலும் புதிய கோணத்திலேயே அமையும் என்பதால், இறுதிப் பரீட்சையை அச்சமின்றி எதிர்கொள்வதற்கான நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பாக மாணவர்கள் இந்த அமர்வை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, 5ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு இந்த பயனுள்ள செயன்முறை அமர்வை மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து தந்த கொட்டாஞ்சேனை வட்டார லயன்ஸ் கழகத்தினருக்கும், அதன் தலைவர் ஆ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட குழுவினருக்கும், பாடசாலை ஆசிரியர்களுக்கும் அதிபர் எம். மூவேந்தன் அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.


