தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களை இலக்கு வைத்து நாடு தழுவிய ரீதியில் 52 சுற்றிவளைப்புகள்! பயன்படுத்த முடியாத மற்றும் காலாவதியான பெருமளவிலான மருத்துவ ஆய்வகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) நாடளாவிய ரீதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களை இலக்கு வைத்து கடந்த சில நாட்களாக விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது 52 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சோதனையிடப்பட்ட பல நிறுவனங்களில் நோயாளிகளின் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மருத்துவ ஆய்வகப் பொருட்களில் கடுமையான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளின் போது நாட்டின் முன்னணி தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது நோயாளிகளின் மருத்துவப் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சில ஆய்வகப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் காலாவதியானதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தமை, தரக்குறைபாடுகள் காணப்பட்டமை மற்றும் தற்சமயம் பயன்பாட்டில் உள்ள பொருட்களுடன் காலாவதியான பொருட்களும் சேர்த்து களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதிக்கப் பயன்படும் உபகரணப் பெட்டிகள் (Test Kits), பல்வேறு ஆய்வக இரசாயனப் பொருட்கள், டெங்கு நோயைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனைப் பெட்டிகள், இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜெல் வகைகள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு ஆய்வகப் பொருட்கள் மற்றும் சாயக் கரைசல்கள் உள்ளிட்ட பல உபகரணங்களும் ஆய்வகப் பொருட்களும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது இந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப் பொருட்கள் அனைத்தும் விசாரணை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இங்கு கண்டறியப்பட்ட குற்றங்கள் தொடர்பில், நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நுகர்வோரின் உயிர் மற்றும் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய செயல்களுக்கு எந்தவொரு விட்டுக்கொடுப்பும் வழங்கப்படமாட்டாது எனவும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் இத்தகைய விசேட சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.