எதிர்க்கட்சியில் இருந்த அநுர குமார இன்று ஜனாதிபதியாக இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சாடல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

எதிர்க்கட்சியில் இருந்தபோது நாட்டின் அனைத்துத் தரப்பினரதும் பிரச்சினைகள் குறித்துப் பேசி, அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் எனப் பாரியளவில் குரலெழுப்பிய அநுர குமார திஸாநாயக்க, இன்று ஜனாதிபதியாக இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (14.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“ஒரு நாடு என்ற ரீதியில் நாம் பல பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அநுர குமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியவற்றைத் திரும்பிப் பார்க்கையில், இன்றைய அவரது அரசாங்கம் எங்களை ஒரு கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்றுள்ளதா என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. அவர் எதிர்க்கட்சியில் இருந்த காலகட்டத்தில், ஒரு வலுவான எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்பட்டு, மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தார். ‘பொஹொசத் ரடக் – லஸ்ஸன ஜீவிதயக்’ (வளமான நாடு – அழகான வாழ்க்கை) என்ற கொள்கைப் பிரகடனப் புத்தகத்தை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கியது.
ஆனால், அக்கொள்கைப் பிரகடனத்தின் மூலம் இன்று இந்த நாட்டிற்கு என்ன கிடைத்துள்ளது? மக்கள் இன்று வறுமையின் உச்சத்திற்கே தள்ளப்பட்டுள்ளனர்.
கொவிட் பெருந்தொற்று நிலவிய காலத்தில்கூட, மக்களின் வாழ்க்கைச் செலவு ஓரளவு சலுகை மட்டத்திலேயே இருந்தது. கடந்த அரசாங்கம் கட்சி, நிற பேதமின்றி மக்களுக்குப் பலமுறை நிவாரணங்களை வழங்கியது. ஆனால் இன்றைய அரசாங்கம் என்ன செய்துள்ளது? திறைசேரியில் நிதி நிரம்பி வழிவதாகக் கூறினாலும், அரசாங்கம் அதன் மூலம் மக்களுக்கு எதையும் செய்வதாகத் தெரியவில்லை.
அரசாங்கம் ஆரம்பத்தில் ‘Clean Sri Lanka’ (தூய்மையான இலங்கை) என்று கூறியது. ஆனால், கடுவலை மேயர் குப்பைகளை சேகரிப்பதற்காக உருவாக்கிய இடமே இன்று கொசுக்கள் பெருகும் இடமாக மாறியுள்ளது. நாடு இன்று டெங்கு ஆபத்தை நோக்கிச் செல்வதற்குக் காரணம் உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றாமையே ஆகும். கடந்த காலங்களில் இவ்வாறான பெரிய விளம்பரப் பலகைகள் இல்லாவிட்டாலும் நாடு தூய்மையாகவே இருந்தது. ஆனால், கோடிக்கணக்கில் பணம் செலவழித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், நாடெங்கிலும் டெங்கு பரவும் சூழலையே உருவாக்கியுள்ளது.
இந்த நிர்வாகச் சீர்கேட்டினால் உயிரிழக்கும் மக்களின் உயிர்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.
மறுபுறம், இன்று போராடும் விவசாயிகள் உண்மையான விவசாயிகளா அல்லது அரசியல் விவசாயிகளா என அரசாங்கம் கேள்வி எழுப்புகிறது. கடந்த காலத்தில் நாமல் கருணாரத்ன, லால் காந்த போன்றோர் வயல்களுக்குச் சென்று, சேறு பூசி, விவசாயிகளை ஏமாற்றி, அப்போதைய அரசாங்கங்களைத் தாக்கினர். விவசாயிக்கு நெல்லுக்கு 150 ரூபாய் வழங்காவிட்டால் அந்த அரசாங்கம் தேவையற்றது என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை வழங்குவதாகவும் கூறினர். ஆனால் இன்று, தற்போதைய சூழ்நிலையில் அதனை வழங்க முடியாது என இந்த அரசாங்கம் கூறுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாம் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கினோம்.
நாடு அரிசியில் சுயமாக நிறைவடைந்திருந்தது. அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை. ஆனால், வெளிநாட்டிலிருந்து எதனையும் இறக்குமதி செய்ய மாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்து உள்நாட்டு விவசாயத்தை அழித்துவிட்டனர்.
அதேபோல், இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் நீதிமன்றக் கட்டமைப்பில் கைவைத்ததில்லை. இந்நாட்டின் உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும், நீதிபதிகளும் சுதந்திரமானவர்கள். ஆனால், இன்று இந்த அரசாங்கம் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பதன் மூலம் நீதிமன்றக் கட்டமைப்பிற்குள் பாரிய செல்வாக்குச் செலுத்த முற்படுகிறது. நீதிமன்றக் கட்டமைப்பை திறம்பட மாற்றுவதற்கே இதனைச் செய்வதாக சுகாதார பிரதி அமைச்சர் கூறுகிறார். வயதை அல்லது சேவைக் காலத்தை நீடிப்பதன் மூலம் எவ்வாறு திறனை அதிகரிக்க முடியும்? நீதிபதிகளின் எண்ணிக்கை, நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும், இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவுபடுத்துவதன் மூலமுமே நீதிமன்றக் கட்டமைப்பை திறம்பட மாற்ற முடியும்.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கு நீதிச்சேவை சங்கம் மற்றும் நீதிபதிகள் சங்கம் ஆகியன பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அரசாங்கத்திற்குத் தேவையான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக இதனைச் செய்ய முற்பட்டால், நாட்டின் நீதித்துறை முற்றிலும் சீரழிந்துவிடும். நீதிமன்றங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் சீர்குலையும்.
எனவே, நாட்டை இவ்வாறானதொரு குழப்ப நிலைக்குத் தள்ள வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

