2025 ஆம் ஆண்டை விட நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: அமைச்சர் வசந்த சமரசிங்க
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எல் நினோ காலநிலை சவால்களை எதிர்கொள்வது குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் (14) கொழும்பில் ஊடகங்களுக்கு முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
தற்போது நாட்டின் சில மாவட்டங்களில் மட்டுமே நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டில் நெல் கொள்வனவுக்காக 6,000 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு 16,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது கடந்த ஆண்டை விட 10,000 மில்லியன் ரூபா அதிகமாகும் என்பதுடன், இதில் பெரும்போக நெல் கொள்வனவுக்காக 10,000 மில்லியன் ரூபாவும், சிறுபோக நெல் கொள்வனவுக்காக 6,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது ஒரு கிலோ நெல்லுக்கான கொள்வனவு விலை 120 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் துறையினரும் நெல் விலையை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் தற்போது மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இடைத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசி விலையை மேலும் அதிகரிக்கக் கோருவது குறித்து விளக்கிய அமைச்சர், ஒரு கிலோ நெல்லை 120 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் போது, ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 1.6 கிலோ நெல் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
அதனடிப்படையில் தற்போதைய சில்லறை விலைகளாக, கெக்குலான் அரிசி ஒரு கிலோ 220 ரூபாவாகவும், நாடு அரிசி 230 ரூபாவாகவும், சம்பா அரிசி 240 ரூபாவாகவும், கீரி சம்பா 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்த ஆலை உரிமையாளர்கள், தற்போது 120 ரூபாவிற்கு கொள்வனவு செய்தாலும் 230 ரூபாவிற்கு அரிசியை விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெற முடியும் என்பதால் அரிசி விலையை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
நாட்டில் ஆங்காங்கே முன்னெடுக்கப்படும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகவே இவ்வாறான போராட்டங்களை ஒருங்கிணைப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு வருடத்திற்குள் விவசாயிகளுக்கான உர மானியம் 100% அதிகரிக்கப்பட்டுள்ளதையும், வரலாற்றில் இல்லாத வகையில் நெல் கொள்வனவுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், எல் நினோ காலநிலை சவாலை எதிர்கொள்வது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு, அனைத்து துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வழக்கமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வறட்சியான காலப்பகுதியாகும் என்பதால் எல் நினோ தாக்கம் தீவிரமடைந்தால் அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. எனினும், வரும் நவம்பர் மாதத்தில் வழமையை விட அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ள பாதிப்புகளிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில், அக்டோபர் மாத தொடக்கத்திலேயே அடுத்த போகத்திற்கான விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிக மழை பெய்யும் போது பயிர்கள் ஓரளவு வளர்ந்த நிலையில் அதாவது சுமார் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் வளர்ச்சியில் வெள்ளத்தைத் தாங்கி நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ மட்டத்திலான கலந்துரையாடல்கள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

