இலங்கை – இந்திய ஊடக உறவுகளை வலுப்படுத்தும் ‘ஊடக விழா 2026’ கொழும்பில் விமரிசையாக நிறைவு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை – இந்திய நட்பு ஊடக அமைப்பின் (SLIMFA) ஏற்பாட்டில், இரு நாட்டு ஊடகத் துறையினரையும் ஒன்றிணைக்கும் “ஊடக விழா 2026” (Media Fest 2026) கொழும்பில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடகப் பரிமாற்றம், தொழில்நுட்ப சவால்கள் மற்றும் எதிர்கால ஊடக உத்திகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி மங்கள விளக்கேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநாட்டின் ஆரம்ப அமர்வு உத்தியோகபூர்வமாகத் தொடங்கியது. விழாவின் அறிமுகக் காணொளி காட்சிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை – இந்திய நட்பு ஊடக அமைப்பின் தலைவர் நிஸ்தார் காசிம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இரு நாட்டு ஊடக உறவுகளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து, முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட ஊடகத்துறை பிரதியமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன அவர்கள் சிறப்புரையாற்றி மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
*முக்கிய அமர்வுகளும் விவாதங்களும்:*
மாநாட்டின் முதலாவது அமர்வு “நம்பிக்கை, உண்மை மற்றும் நம்பகத்தன்மைக்கான போராட்டம்” என்ற கருப்பொருளில் அமைந்திருந்தது. இதில் தவறான தகவல்கள், போலியான செய்திகளை எதிர்கொள்ளுதல் மற்றும் இன்றைய தகவல் சூழலில் ஊடகவியலின் பங்கு குறித்து சுமிதா பிரகாஷ் அவர்கள் முதன்மை உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து தில்ருக்ஷி ஹந்துனெத்தி அவர்களின் நெறியாள்கையில் சுமிதா பிரகாஷ், தீபாஞ்சலி அபேவர்தன, அமல் ஜயசிங்க மற்றும் நிலாந்தன் நிருதன் ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடலும், கேள்வி-பதில் அமர்வும் இடம்பெற்றன.
மதிய உணவுக்குப் பின் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் “தொலைக்காட்சி, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை உள்ளடக்கிய முழுமையான ஊடக உத்திகள்” என்ற தலைப்பில் அசோக் மாலிக் அவர்கள் உரையாற்றினார். தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில் ஊடக வர்த்தக மாதிரிகளை எவ்வாறு வெற்றிகரமாகக் கையாள்வது, வருமானப் பல்வகைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்து அவர் விளக்கமளித்தார். இந்த அமர்வின் கலந்துரையாடலை கலாணி குமாரசிங்க நெறிப்படுத்தியதுடன், அசோக் மாலிக், நிஸ்தார் காசிம், விமுக்தி கருணாரத்ன, ஜமிலா ஹுசைன் மற்றும் ரொபர்ட் அன்தனி ஆகியோர் குழுவளர்களாகப் பங்கேற்றனர்.
மாலையக அமர்வில் “வாசகர்களிலிருந்து பார்வையாளர்களாகவும், ஊடகங்களிலிருந்து ஆளுமைகளாகவும் மாறும் நுகர்வோர் போக்கு” என்ற பொருளில் மரியா ஷகில் அவர்கள் சிறப்புரையாற்றினார். சமூக ஊடகங்களின் ஊடான செய்தி நுகர்வு மற்றும் இன்ஃப்ளூயன்ஸர்களின் (Influencers) தாக்கம் குறித்து அவர் பேசினார். தனாநாத் பெர்னாண்டோ அவர்களின் நெறியாள்கையில் நடைபெற்ற இதன் குழு விவாதத்தில் மரியா ஷகில், நாமினி பண்டித, மஹேஷ் ஜோனி மற்றும் இந்திக சகலசூரிய ஆகியோர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
மாநாட்டின் இறுதிப் பகுதியில், அன்றைய தினத்தின் ஒட்டுமொத்த விவாதங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்த சுருக்கத்தை விழாப் பணிப்பாளர் சந்தோஷ் மேனன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இலங்கை – இந்திய நட்பு ஊடக அமைப்பின் உப தலைவர் ஷெஹான் பரணகேயின் நன்றியுரையுடன் “ஊடக விழா 2026” உத்தியோகபூர்வமாக நிறைவடைந்தது.
இதன்போது ஊடகங்களுக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவித்த வெகுசன ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா அரியரத்ன…
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடகத் துறையின் ஒத்துழைப்பையும், இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவதில் ‘ஸ்லிம்பா’ (SLIMFA – Sri Lanka India Media Friendship Association) எனப்படும் ‘இலங்கை – இந்திய நட்பு ஊடக அமைப்பு’ மிக நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு, சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாக பிரதியமைச்சர் கௌசல்யா அரியரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்திய நட்பு ஊடக அமைப்பினால் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது தனது இரண்டாவது ஆண்டில் கால்பதித்துள்ளது. கடந்து வந்த காலப்பகுதியில் இரு நாடுகளின் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான இருதரப்புப் பரிமாற்றத் திட்டங்கள், நிபுணத்துவக் கலந்துரையாடல்கள், அறிவுப் பகிர்வுகள் மற்றும் இருதரப்புத் தொடர்பாடல்களை மேம்படுத்துதல் எனப் பல பரந்தளவிலான வேலைத்திட்டங்களை இவ்வமைப்பு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக அவர் பாராட்டினார்.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலும் கலாசாரம், சமೂகம் மற்றும் அரசியல் ரீதியான தொடர்புகளுக்கு அப்பால், ஊடகத் துறையின் மூலமாக நிபுணத்துவப் பரிமாற்றங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதற்கு இந்த அமைப்பு ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது. இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் ஊடகவியலாளர்கள் கற்றுக் கொள்வதற்கும், தங்களின் பரந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் இதில் நிறைய வாய்ப்புகள் காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா என்பது மிகப்பெரிய ஊடகத் துறையையும், வலுவான ஊடகக் கைத்தொழிலையும் கொண்ட ஒரு நாடாகும். அதேபோன்று, இலங்கையிலும் ஊடகவியலாளர்கள் தங்களது ஊடகக் கைத்தொழில் பணிகளை மிகவும் கௌரவமான முறையில் முன்னெடுப்பதற்குப் பொருத்தமான, சுதந்திரமானதொரு சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கே தற்போதைய அரசாங்கம் எதிர்பார்த்தத்துள்ளது.
எனவே, இந்த ஊடக மாநாட்டின் மூலம் இரு நாட்டு ஊடகவியலாளர்களும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் அறிவு மற்றும் அனுபவங்களின் ஊடாக, நம் நாட்டு ஊடகத் துறையையும் அதன் தரத்தையும் மேலும் கட்டியெழுப்புவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் கௌசல்யா அரியரத்ன அவர்கள் மேலும் தெரிவித்தார்.


