“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு: போதைப்பொருள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் உள்ளிட்ட முக்கிய தகவல்களைப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (10) கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் பிரதான அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் நடைபெற்றது.
இந்த விசேட சந்திப்பில் புனர்வாழ்வு பணியகத்தின் தலைவர் பேராசிரியர் வசந்தா சுபசிங்க, அதன் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித், அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் (ஓய்வுபெற்ற) கே.கே.எஸ். கொத்தலாவல, உதவிப் பணிப்பாளர் நிலானி அளுத்கே மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் எரங்கா ராஜபக்ஷ ஆகிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, புனர்வாழ்வு பணியகத்தின் கீழ் போதைப்பொருள் புனர்வாழ்வுக்காகத் தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 28% இனால் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் புனர்வாழ்வு பணியகத்தின் நேரடி உதவிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கும் நபர்கள் 0769627761 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் உடனடியாக தமக்கான வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை, அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக, 2026 ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் 18,901 ஆலோசனை சேவைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.
அத்துடன், இக்காலப்பகுதிக்குள் மாத்திரம் குறித்த சபையினால் 4,652 நபர்கள் முறையான சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அவசர உதவிகள் மற்றும் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் 1927 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தின் மூலம் தமக்குத் தேவையான சேவைகளைத் தடையின்றிப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

