போகாம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறக்கும் முடிவை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்ல, கண்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போகாம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள அவசர முடிவுக்குத் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பொறுப்பான அமைச்சரினால் கண்டி போகாம்பறை சிறைச்சாலையை மீண்டும் நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் போகாம்பறை சிறைச்சாலையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு எவ்வித தொலைநோக்கும் இன்றி, அவசரமாக எடுக்கப்பட்ட ஒன்றாகும். இதற்கு கண்டி மாவட்ட மக்கள் தமது பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீ தளதா மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள இந்த போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை, கண்டி நகரின் அபிவிருத்தியை முன்னிட்டே 2014 இல் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவொரு சாதாரண நிர்வாக முடிவு அல்ல, கண்டி நகரின் எதிர்கால வளர்ச்சியை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானமாகும். எனவே, இந்த முடிவை பின்னோக்கி நகர்த்த வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

போகம்பறை சிறைச்சாலை கட்டிடங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என்பதால், அவை கைதிகளைத் தடுத்து வைப்பதற்குப் பொருத்தமானவை அல்ல. இதனைத் தற்காலிகமாகப் புனரமைக்க அரசாங்கம் பில்லியன் கணக்கான ரூபாய்களைச் செலவிட நேரிடும். தற்காலிகத் தீர்வுக்காக இவ்வளவு பெரிய தொகையை வீணடிப்பது புத்திசாலித்தனமானதல்ல.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சில சம்பவங்களை அடுத்தே அரசாங்கம் இந்த அவசர முடிவை எடுத்துள்ளது. அதேநேரம், தும்பறை சிறைச்சாலையின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. போகம்பறையை புனரமைக்கப் பயன்படுத்தும் நிதியை, தும்பறை சிறைச்சாலையின் எஞ்சிய பணிகளுக்குப் பயன்படுத்த அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
மேலும், போகம்பறை சிறைச்சாலையானது நகரின் மத்தியில் இருப்பதால் எவரும் இலகுவாக அணுகக்கூடிய, பாதுகாப்பற்ற ஒரு இடமாகும்.

இதனால் நீர்கொழும்பில் ஏற்பட்டது போன்ற அசம்பாவிதங்கள் இங்கும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இந்த இடத்தை ஒரு பன்முகத்தன்மை கொண்ட வணிக மற்றும் கலாசார மையமாக (Multi-purpose Center) அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது.

எனினும், அந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாமல் போனது. எனவே, அரசாங்கத்தின் நிதி அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு, திட்டமிட்டபடி அந்த பன்முகத்தன்மை மையத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் கண்டி மாவட்ட மக்களுக்கு சுமார் 2000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

நாட்டில் உள்ள சிறைச்சாலை அமைப்பில் 11,000 கைதிகளை மட்டுமே தடுத்து வைப்பதற்கான வசதிகள் உள்ளன. ஆனால் தற்போது சுமார் 42,000 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 75 சதவீதமானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளாவர்.

விளக்கமறியல் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கத்திற்குப் பல வழிகள் உள்ளன. குறிப்பாக, பிணைப் பணத்தைச் செலுத்த முடியாமல் சிறைகளில் வாடும் கைதிகளுக்கு அரசாங்கம் தலையிட்டு தகுந்த தீர்வை வழங்கலாம். அத்துடன், வெளிநாடுகளைப் போல ‘பிணை நிதியம்’ (Bail Fund) ஒன்றை நிறுவி, ஏழைக் கைதிகளுக்கு உதவ முடியும் என்பதோடு, வீட்டுக் காவலில் (House Arrest) வைப்பதன் மூலமும் சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைக்க முடியும்.

இவ்வாறான மாற்று வழிகளை ஆராய்ந்து சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்குப் பதிலாக, போகாம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறக்க எடுத்த தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக மீள்பரிசீலனை செய்து, சரியான முடிவை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.