கோட்டே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பு: 2029 இல் நாமல் ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவர ஒன்றிணைவோம் என அழைப்பு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு நேற்று இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்க மதுகொட உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று தாங்கள் கிராமங்களுக்குச் செல்லும்போது பெருமளவிலான மக்கள் தங்களோடு இணைந்து கொள்வதாகவும், தமக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் இந்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது மக்களே என்றும் குறிப்பிட்டார். வேலை செய்து காட்டிய ஒரு அரசியல் சக்தி என்ற ரீதியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் சக்தி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இன்றைய அரசாங்கம் பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே ஆட்சிக்கு வந்த போதிலும், ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாகக் குற்றம் சாட்டினார். வேலைவாய்ப்பு கோரி போராடிய பட்டதாரிகள் கூட இன்று அநீதியை எதிர்கொண்டுள்ளதுடன், கைத்தொழில் மற்றும் முதலீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் வேலைவாய்ப்புகள் அற்றுப்போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வரியதிகரிப்பு, வட்டி வீத உயர்வு போன்ற காரணங்களால் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் என்றும், மின்சாரம், தண்ணீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கம் என்பது மக்களின் துயரங்களை உணர்ந்து தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை சம்பவத்தின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்களை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தாமல் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இன்று நாட்டுக்குத் தேவை வெறுப்பு, பொறாமை மற்றும் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அல்ல என்றும், அபிவிருத்தி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் சக்தியே தேவை என்றும் குறிப்பிட்ட அவர், ஒரு புதிய தலைமுறையின் அரசியல் சக்தியாக மக்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பத் தாங்கள் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய சஞ்சீவ எதிரிமான்ன, ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக்காலத்தில் தற்போது இரண்டு வருடங்கள், அதாவது மூன்றில் ஒரு பகுதி நிறைவடைந்துள்ள போதிலும் இந்த அரசாங்கம் கோட்டே மக்களுக்காகச் செய்த உருப்படியான எந்தவொரு அபிவிருத்தியையும் காணவில்லை எனவும், வெறும் விளம்பரங்களும் விழாக்களும் மட்டுமே நடப்பதாகவும் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலத்திலேயே கொழும்பு நகரம் குப்பைகள் அகற்றப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த அழகிய நகரமாக மாற்றப்பட்ட அந்தச் சேவையை கோட்டே மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் எனக்கூறிய அவர், இன்று தாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும், இந்த அரசாங்கத்திற்கு மேலும் ஆதரவளிக்க மக்களுக்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். அண்மையில் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 7 அதிகாரிகளின் மரணங்களுக்கு இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், முதலாவது இரு மரணங்கள் நிகழ்ந்த போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஏனைய உயிர்களையாவது காப்பாற்றியிருக்கலாம் என்றார். 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சிறைச்சாலை மறுசீரமைப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறினாலும், பொறுப்பான அமைச்சர் கடந்த ஒரு வருடமாக பிரதான சிறைச்சாலைகளுக்கு நேரில் சென்று பார்வையிடக் கூட இல்லை எனச் சாடிய அவர், 2029 ஆம் ஆண்டில் இந்நாட்டின் எதிர்காலத்தை நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்பதால், அதற்கு இன்று முதலே தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட அழகிய கோட்டே புரம், இன்று குப்பைக் கூளங்களாலும், முறையற்ற நிர்வாகத்தினாலும், டெங்கு அபாயத்தினாலும் சீரழிந்து போயுள்ளதாகக் கவலை வெளியிட்டார். அன்று அமைக்கப்பட்ட வீதிகளும் பூங்காக்களும் இன்று பராமரிப்பின்றி பாழடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் வரி செலுத்துவது அபராதம் கட்டுவதற்காக அல்லாமல் சுத்தமான சூழலையும் சுகாதாரப் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்வதற்கே ஆகும் என்றார். டெங்கு பரவலுக்கு மக்களை மட்டும் குறை கூற முடியாது எனவும், உள்ளூராட்சி மன்றங்களும் அரசாங்கமும் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திய தேரர், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப 2029 இல் நாமல் ராஜபக்ஷவை தலைவராக்க மக்கள் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டார்.
இறுதியாக உரையாற்றிய யூ.கே. சுமித் உடுகும்பர, எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் நாமல் ராஜபக்ஷவுடன் நாடளாவிய ரீதியில் மக்கள் நாளுக்கு நாள் இணைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது என்றார். அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை என எங்கு சென்றாலும் மக்கள் அலை திரள்வதாகவும், நாமல் ராஜபக்ஷவே நாட்டின் எதிர்காலத் தலைவர் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நாட்டின் ஒவ்வொரு துறைப் பற்றியும் சிறந்த புரிதலுடன் பேசி, மக்களின் பிரச்சினைகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கும் தலைவராக அவர் விளங்குவதாகவும், 2029 இல் நாமல் ராஜபக்ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அவர் ஜனாதிபதியாகும்போது கொழும்புக்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்க கோட்டே தொகுதியின் தலைவர் மிலிந்த ராஜபக்ஷ தயாராக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் விவசாயி முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரையும் ஏமாற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். நாட்டில் 75,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தும் அரசாங்கத்திடம் முறையான திட்டம் இல்லை எனவும், தங்களது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று இல்லை எனவும், போதிய மருந்துகள் இன்றி மக்கள் மருத்துவமனைகளில் தவித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


