சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த ஜெயிலரின் இல்லத்தில் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள்: சட்ட நடைமுறைகள் முடியாததால் நேற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

மாத்தறை, கம்புருபிட்டிய, ஹொரபாவிட்ட பகுதியைச் சேர்ந்த எம்.ஜி. உபாலி (42 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடற்படையில் 12 ஆண்டுகள் வெற்றிகரமாக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர், சிறைச்சாலைத் துறையில் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜெயிலராகப் பணியாற்றி வந்தவராவார்.

உயிரிழந்த ஜெயிலரின் சடலம், தேசிய மருத்துவமனையில் இன்று சட்டபூர்வ மரண விசாரணை நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆறு மற்றும் ஒன்பது வயதுடைய இரு மகன்களின் தந்தையான உபாலி, கிராமத்திற்கும் நாட்டிற்கும் அளப்பரிய சமூக சேவை ஆற்றியுள்ளதாக அவரது தாயாரான ரணவக ஆரச்சிகே வினிதா சமன்லி மற்றும் உறவினர்கள், அயலவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
> “அவரது இழப்பு ஒட்டுமொத்த ஹொரபாவிட்ட கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
>
அவரது மனைவி கயானி உதயங்கி மற்றும் இரு பிள்ளைகளும் தங்களது குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், இவரது மறைவு கிராமத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று இத்துயரச் செய்தி வெளியானதிலிருந்து, உறவினர்களும் கிராம மக்களும் இணைந்து உபாலி அவர்களின் சடலத்தை இல்லத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்பொருட்டு ஹொரபாவிட்ட பகுதியில் உள்ள அவரது இல்லமும் கிராமமும் வெள்ளைக்கொடிகளாலும் பந்தல்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சோகமயமாகக் காட்சியளிப்பதை அவதானிக்க முடிகிறது.