இலங்கை மற்றும் இந்திய செவிப்புலன் குறைபாடுடைய மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: முதற்போட்டியில் இந்தியா வெற்றி!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை செவிப்புலன் குறைபாடுடைய மகளிர் கிரிக்கெட் அணியும், இந்திய செவிப்புலன் குறைபாடுடைய மகளிர் கிரிக்கெட் அணியும் தங்களது வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது சர்வதேச இருபதுக்கு20 (T20) கிரிக்கெட் தொடரில் மோதும் போட்டித் தொடர் நேற்று மொரட்டுவ டி சொய்சா மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
இரு அணிகளுமே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடும் தங்களது முதலாவது தொடர் இது என்பதால், இப்போட்டித் தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு20 தொடரின் முதலாவது போட்டியில் இந்திய செவிப்புலன் குறைபாடுடைய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இப்போட்டித் தொடரில் இலங்கை அணியை டிலானி விக்ரமசிங்கவும், இந்திய அணியை காஜல் தவானும் தலைவிகளாக வழிநடத்துகின்றனர்.
இத்தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தில்ஹானி விக்ரமசிங்க 14 ஓட்டங்களையும், அகேஷா பிரபோதனி 11 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். இந்திய அணியின் பந்துவீச்சில் திறம்பட செயற்பட்ட நிதா சாபி சாயிக் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சந்தனி கான் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.
பின்னர் 77 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 79 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நிதா சாபி சாயிக் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும், ரெட்டி ஜெயோஷ்னா 22 ஓட்டங்களையும் விளாசினர்.
பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்திய இந்திய அணியின் நிதா சாபி சாயிக் போட்டியின் சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டித் தொடரின் ஆரம்ப விழாவில் முதன்மை விருந்தினராக மொரட்டுவ மாநகர சபையின் முதல்வர் நிஷாந்த பிரதீனாந்து கலந்துகொண்டார்.
அத்துடன் ஆசிய செவிப்புலன் குறைபாடுடையோர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் இந்திய செவிப்புலன் குறைபாடுடையோர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சுமித் ஜெயின், இலங்கை செவிப்புலன் குறைபாடுடையோர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் முகமது நைசர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது ஆசிய மற்றும் இந்திய செவிப்புலன் குறைபாடுடையோர் கிரிக்கெட் சங்கத் தலைவர் சுமித் ஜெயின், இலங்கை செவிப்புலன் குறைபாடுடையோர் கிரிக்கெட் சங்கத் தலைவர் முகமது நைசர், இலங்கை அணியின் தலைவி டிலானி விக்ரமசிங்க, இந்திய அணியின் தலைவி காஜல் தவான் மற்றும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ரிஷான் சதித் சில்வா ஆகியோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டித் தொடர் குறித்தும், வீராங்கனைகளின் விளையாட்டுத்திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் குறித்தும் தங்களது விசேட கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

