சேருநுவர மாவிலாறு நீர்மட்டம் குறைந்தால் : 25,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சேருநுவர மாவிலாற்றின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், அப்பகுதியில் உள்ள சுமார் 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையான வறட்சியில் பாதிப்பு

இதனையடுத்து, தங்களது பயிர்களைக் காப்பாற்றும் நோக்கில், கந்தக்காடு பகுதியிலிருந்து பாயும் மகாவலி ஆற்றின் நீரைத் தடுத்து, தற்காலிக மணல் மூட்டை அணை அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மகாவலி ஆற்றின் மேல்நிலைப் பகுதிகளில் போதிய மழைவீழ்ச்சி இல்லாததன் காரணமாக, மாவிலாற்றிற்கு வரும் நீரின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதுடன், இதுவே தற்போதைய நீர்மட்டச் சரிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தின் உப்பாறு, கங்கை மற்றும் ரால்குளி முகத்துவாரங்கள் வழியாக மகாவலி ஆற்றின் நீர் கடலில் கலப்பதைத் தடுத்து, கந்தக்காடு பகுதியிலிருந்து உப்பாறு நோக்கிப் பாயும் நீரை மாவிலாற்றிற்குத் திருப்புவதே இந்த தற்காலிக மணல் மூட்டை அணை அமைக்கும் பணியின் பிரதான நோக்கமாகும்.

இவ்வாறான பாரிய மணல் மூட்டை அணை அமைக்கும் நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் முன்னெடுக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர், 2024 ஆம் ஆண்டு மே மாதம் இதேபோன்ற மணல் மூட்டை அணை அமைத்து நீர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கடுமையான நீர் பற்றாக்குறையால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

அரச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி தலையீடு செய்து, போதுமான நீர்ப்பாசன வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவிவசாயிகள் தெரிவிக்கின்றனர்