பேலியகொடவில் 4 மில்லியன் கிலோவிற்கும் அதிக காலாவதியான சீனி மீட்பு: பாரிய களஞ்சியசாலைக்கு சீல்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

காலாவதியான சீனியை புதிய சீனியுடன் கலந்து, மறுபொதியிடல் செய்து குறைந்த விலைக்கு சந்தைக்கு விநியோகித்த பாரிய அளவிலான சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான பேலியகொட பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்று நேற்று (06) நுகர்வோர் விவகார அதிகார சபையினராலும் (CAA) வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினராலும் கூட்டாக முற்றுகையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான கம்பஹா மாவட்டம், களனி, பெதியகொட பகுதியில் அமைந்துள்ள பாரிய களஞ்சிய வளாகம் ஒன்றில் இந்த மோசடி இடம்பெறுவதாக வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தத் திடீர் முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, தற்போது காலாவதியாகியுள்ள சீனி இருப்புகளை, காலாவதியாகாத புதிய சீனி இருப்புகளுடன் கலந்து, மீண்டும் புதிய பைகளில் பொதியிட்டு சந்தைக்கு விநியோகித்துள்ளமை புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட சீனி, தற்போதைய சந்தை விலையை விட மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த களஞ்சியசாலையில் தலா 50 கிலோகிராம் எடையைக் கொண்ட சுமார் 85,000 சீனி மூடைகள், அதாவது 4.2 மில்லியன் கிலோகிராமிற்கும் அதிக சீனி இருப்பு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் காவல்துறை அதிகாரிகளால் குறித்த களஞ்சிய வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.