70 இலட்சத்திற்கு பேராசைப்பட்டு திலீப பீரிஸ் தனது சட்டத்தரணி பதவியை இழக்க நேரிடும்: உதய கம்மன்பில எச்சரிக்கை

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை இராணுவத்தின் மிகச்சிறந்த இராணுவ வீரரான லெப்டினன்ட் சாந்த ஜயதிலக, யுத்தக் களத்தில் ஆற்றிய அர்ப்பணிப்புகளுக்காக ‘வீர விக்ரம விபூஷண’ மற்றும் ‘ரணசூர’ உள்ளிட்ட 7 பராக்கிரம பதக்கங்களை வென்றவர் ஆவார். கடந்த யுத்த காலத்தில் உயிருடன் இருக்கும் போதே ஒரு இராணுவ வீரரினால் பெறப்பட்ட மிக உயர்ந்த விருதான ‘வீர விக்ரம விபூஷண’ விருதை கொச்சைப்படுத்தும் வகையில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் அவமதிப்பாகப் பேசியுள்ளார் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கு எனத் தனிப்பட்ட சட்ட அதிகாரம் எதுவும் இல்லை என்றும், அவர் சட்டமா அதிபரின் பிரதிநிதியாகவே நீதிமன்றில் முன்னிலையாகிறார் என்றும் தெரிவித்த அவர், ஜனாதிபதியினால் முறையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ பதக்கங்களையே, அரசாங்கத்தின் கீழ் பணியாற்றும் ஒரு அதிகாரி ‘தகடுத் துண்டுகள்’ எனக் கூறி அவமதித்துள்ளார் என்றார். யுத்தக் களத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பெற்ற இத்தகைய பதக்கங்களை, அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயல்பட்டு இராணுவ வீரர்களை அவமதிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை திலீப பீரிஸுக்கு நினைவூட்டுவதாகவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

சாந்த ஜயதிலகவின் சீருடையில் இருந்த 7 பதக்கங்களையும் சுட்டிக்காட்டிப் பேசிய கம்மன்பில, ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் கூறிய கருத்தொன்றை மேற்கோள் காட்டினார். ஒரு தகடு அடித்துவிட்டுச் சென்றாலும் 10 இலட்சம் வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியிருந்ததை மனதில் வைத்து, இந்த 7 பதக்கங்களுக்கும் சேர்த்து 70 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொள்ளும் பேராசையில்தான் திலீப பீரிஸ் இவ்வாறு இராணுவ வீரர்களை அவமதித்தாரோ என்ற நியாயமான சந்தேகம் எழுவதாக அவர் குறிப்பிட்டார். உயர் நீதிமன்ற விதிகள் 53 மற்றும் 54 இன் படி, ஒரு சட்டத்தரணி நீதிமன்றில் வாதிடும் போது சந்தேகநபர்களையோ அல்லது மூன்றாம் தரப்பினரையோ அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என்றும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. திலீப பீரிஸ் இந்த விதிகளை மீறியுள்ளதால், அவரது சட்டத்தரணி தொழிலை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான பின்னணி தற்போது உருவாகியுள்ளது என்றார்.
மேலும், நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் தமக்கு எதிராகத் தொடரப்பட்ட போலி வழக்கின் போது, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் விகாரை நிகழ்வொன்றில் பங்கேற்க தமக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய போது, திலீப பீரிஸ் அதனை ‘நாட்டை விட்டுத் தப்பியோடும் சதி’ எனக் கூறி நீதிமன்றில் எவ்வாறு அவமானப்பட்டார் என்பதையும் கம்மன்பில நினைவு கூர்ந்தார்.

அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்து, 34 பேர் காயமடைந்த சம்பவத்திற்கு அதிகாரிகளையோ அல்லது கைதிகளையோ மட்டும் குறை கூற முடியாது என உதய கம்மன்பில தெரிவித்தார்.

சிறைச்சாலைகளுக்குள் நிலவும் கடுமையான நெருக்கடியே இந்த மோதல்களுக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான புள்ளிவிவரங்களையும் வெளியிட்டார்.

சிறைச்சாலைகளின் மொத்தக் கொள்ளளவு 10,395 கைதிகள் ஆகும். ஆனால், 2026 ஜூன் 29 நிலவரப்படி அங்கு 42,034 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, சிறைச்சாலைகளின் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கழிவறை வசதிகள், உணவு, உறங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் கைதிகளுக்கு இடையே நாளாந்தம் மரணப் போராட்டம் நிலவுகிறது. இது கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இருதரப்பினரையும் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ள போதிலும், சிறைச்சாலைகளின் கொள்ளளவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதற்குத் தீர்வாக சிறைச்சாலைகளை அதிகரிப்பதை விடுத்து, நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் திறனையும் அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொடவின் தரவுகளின்படி, இலங்கையில் ஒரு நீதிமன்றத்தில் சராசரியாக 3,303 வழக்குகள் விசாரணையில் உள்ளன. பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட சராசரியாக 10 வருடங்களும் இரண்டு மாதங்களும் ஆகின்றன. மேல்முறையீடுகள் செய்யப்பட்டால் இந்த காலம் மேலும் நீடிக்கும். வழக்குகள் தாமதமாவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் தாமதமாதல் மற்றும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை தாமதமாதல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் உள்ளன.
எனவே, அரசாங்கம் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இந்த அறிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என கம்மன்பில வலியுறுத்தினார். தற்போதைய சிறைக்கைதிகளில் 75% ஆனோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளாவர். வழக்குகளை விரைவுபடுத்தி தீர்ப்புகளை வழங்கும் போது சிறைச்சாலைகள் தானாகவே காலியாகும் என்றும், நீதி விரைவாக நிலைநாட்டப்படும் போது மக்கள் சட்டத்திற்குப் பயந்து குற்றச் செயல்கள் குறையும் என்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.