ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு: நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் மற்றும் டெங்கு அச்சுறுத்தல் குறித்து அரசாங்கத்தின் மீது கடுமையான சாடல்*

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI


இன்றைய தினம் கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கட்சியினால் (SLFP) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடுகள், சிறைச்சாலை மரணங்கள் மற்றும் டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் தோல்விகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மொறட்டுவை தொகுதி அமைப்பாளரும் மொறட்டுவை நகர சபை உறுப்பினருமான சுஜித் புஷ்பகுமார, நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் குறித்து தனது பலத்த கவலையை வெளியிட்டார். இன்று ஜனாதிபதியாக இருக்கும் அனுர குமார திஸாநாயக்க, அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசியதை நினைவுகூர்ந்த அவர், சட்டத்தின்படி சிறையிலடைக்கப்படும் கைதிகளின் முழுமையான பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்கும் பட்சத்தில், சிறைக்காவலில் இருக்கும் கைதிகள் இவ்வாறு மரணமடையும் போது அதற்கு யார் பொறுப்பேற்பது எனக் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இந்த நிலைமையை ஜனாதிபதி இன்று நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பெருமளவிலான கைதிகள் தற்போதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களைப் பாதுகாக்குமாறு கோரி நேற்று பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்த சுஜித் புஷ்பகுமார, நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு ஆபத்தான சூழலிலும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் டெங்கு ஒழிப்பை முன்னிறுத்தி அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், குறிப்பாக மொரட்டுவை பகுதியில் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து வந்து இந்நோயைக் கட்டுப்படுத்தும் வரை காத்திருக்காமல் அரசாங்கம் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜா-எல தொகுதியின் அமைப்பாளர் ரங்க கொடிதுவக்கு, தற்போதைய அரசாங்கம் டெங்குவை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு வெறும் ஊடகக் காட்சிகளை மட்டுமே நடத்தி வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கடந்த காலங்களில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் டெங்கு ஒழிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமாக இறங்கியதை சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கத்திடம் அதுபோன்ற எந்தவொரு தயார்நிலையோ அல்லது முறையான வேலைத்திட்டங்களோ இருப்பதாகத் தெரியவில்லை என விசனம் தெரிவித்தார்.

எனவே, சிறைச்சாலைகளின் சுகாதார நிலையை மேம்படுத்தி கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு ஆபத்திலிருந்து மக்களை மீட்பதற்கும் அரசாங்கம் வெறும் விளம்பரங்களை விடுத்து உடனடியாகத் தலையிட்டு முறையான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என சிறீலங்கா சுதந்திரக் கட்சி இச்சந்திப்பில் வலியுறுத்தியுள்ளது.