கொழும்பு போர்ட் சிட்டியில் ஆகஸ்ட் 8 அன்று பிரம்மாண்டமாக அரங்கேறும் ‘Night in Serendib’ இசைத் திருவிழா!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் நேரடி பொழுதுபோக்கு உலகிற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கும் நோக்கில், 11.11 Entertainment நிறுவனம் பெருமையுடன் வழங்கும் ‘Night in Serendib’ என்ற பிரம்மாண்ட இசை மற்றும் கலாச்சாரத் திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி கொழும்பு போர்ட் சிட்டியில் (Port City Colombo) உள்ள Marquee அரங்கில் நடைபெறவுள்ளது.

அன்று மாலை 4:00 மணி முதல் இந்த விழா ஆரம்பமாகவுள்ள நிலையில், இது குறித்த உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் (05) மாலை கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்தச் சந்திப்பானது, தென்னிந்தியாவின் பிரபல ராப் இசை பாடகர் பால் டப்பா, 11.11 Entertainment நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாரணி, பிக்மீ இவென்ட்ஸ் (PickMe Events) அதிகாரிகள் மற்றும் சினமன் கிரான்ட் ஹோட்டல் (Cinnamon Grand Hotel) அதிகாரிகள் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 11.11 Entertainment நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாரணி கருத்து தெரிவிக்கும் போது, இந்த விழா வெறும் இசை நிகழ்ச்சி மட்டுமல்லாமல், மதியம் முதல் இரவு வரை ரசிகர்கள் முழுமையாகக் கொண்டாடும் வகையில் ஒரு பிரம்மாண்ட திருவிழாவாக திட்டமிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இவ்விழாவின் பிரதான ஈர்ப்பாக, தென்னிந்தியாவின் மிகப்பிரபலமான ராப் இசைக்கலைஞரான (Rapper) பால் டப்பா (Paal Dabba) முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்து நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

அவருடன் இணைந்து தென்னிந்தியாவின் சிறந்த கலைஞர்களான கரேஷ்மா (Kareshma) மற்றும் சாரா பிளாக் (Sarah Black) ஆகியோரும் பங்கேற்கவுள்ளதுடன், தென்னிந்தியாவில் இருந்து மிக வலுவானதொரு கலைஞர் பட்டாளம் இதற்காக இலங்கை வரவுள்ளதாக தாரணி கருத்து தெரிவிக்கும் போது மேலும் கூறினார்.

இவர்களுடன் இந்தியாவின் சென்னையில் இருந்து வருகை தரும் DJ சுமன் ரசிகர்களைத் தன் இசையால் உற்சாகப்படுத்தவுள்ளதுடன், இலங்கையின் உள்ளூர் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், புகழ்பெற்ற இளையநிலா இசைக்குழு, DJ லோஷ் மற்றும் ஆஷ் ஆகியோரின் அதிரடி கலை நிகழ்ச்சிகளும் மேடையை அலங்கரிக்கவுள்ளன.

மதியம் முதல் இரவு வரை ரசிகர்களை சோர்வடையாமல் உற்சாகமாக வைத்திருக்கும் வகையில் பல விசேட பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக தாரணி கருத்து தெரிவிக்கும் போது விவரித்தார்.

அந்தவகையில், இலங்கையில் முதல் முறையாக இசை விழாவுடன் இணையும் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நீர் விளையாட்டு அம்சங்கள், பேஷன் மற்றும் அழகு சார்ந்த பிரத்தியேக கிளாம் (Glam) பகுதிகள் மற்றும் பலதரப்பட்ட சுவைகளில் ஸ்டால்கள் எனப் பல விடயங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இலங்கை வரலாற்றுச் சாதனையொன்றாக, இந்த விழாவிற்கான நுழைவுச்சீட்டை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு ரசிகருக்கும் நிகழ்வு நடைபெறும் இடத்தில் இலவச உணவு வழங்கப்படும் என தாரணி கருத்து தெரிவிக்கும் போது பிரத்தியேகமாக அறிவித்தார்.

இதற்கு முன்னர் இலங்கையில் எவரும் இவ்வாறானதொரு புதிய பொழுதுபோக்கு முயற்சியை மேற்கொண்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது இந்த விழாவிற்கான முன்கூட்டிய விற்பனை (Pre-sales) மிக வேகமாக நிறைவடைந்து வருவதாகவும், விரைவில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும் (Sold out) என எதிர்பார்ப்பதாகவும் தாரணி மேலும் தெரிவித்தார்.

இதற்கான நுழைவுச்சீட்டுகளை பங்குதாரர்களான ‘PickMe Events’ செயலி மற்றும் இணையத்தளம் ஊடாக ரசிகர்கள் விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.

இசை, கலாச்சாரம் மற்றும் சமூகத்தை ஒன்றிணைக்கும் இந்த பிரம்மாண்ட சர்வதேச தரத்திலான விழாவில் கலந்துகொண்டு, ஆகஸ்ட் 8ஆம் தேதியை மறக்கமுடியாத நாளாக மாற்றிக்கொள்ளுமாறு 11.11 குழுமம் அனைத்து இசை ரசிகர்களுக்கும் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.