கொழும்புத் திட்டத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா: பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பங்கேற்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்புத் திட்டத்தின் (Colombo Plan) 75ஆவது ஆண்டு நிறைவு விழா, நேற்றைய தினம் மாவை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, கொழும்புத் திட்டத்தின் பொதுச் செயலாளர் அதிமேதகு சூளாமணி சார்ட்சுவான் (H.E. Chulamanee Chartsuwan), இராஜதந்திர தூதுவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் முக்கிய அங்கமாக, கொழும்புத் திட்டத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஏழரை தசாப்த கால நீடித்த நட்பு, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வளர்ச்சியை அடையாளப்படுத்தும் வகையில், 75ஆவது ஆண்டு நிறைவு நினைவுத் தபால் தலை அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் மனிதவள மேம்பாடு, கல்வி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு கொழும்புத் திட்டம் ஆற்றிவரும் நீண்டகாலப் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். நிலையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பங்களிப்பை வலுப்படுத்துவதில் இந்த அமைப்பு முக்கியப் பங்காற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அறிவாற்றல், திறன்கள் மற்றும் வாய்ப்புகளை அர்த்தமுள்ள பிராந்திய கூட்டாண்மைகள் மூலம் மேம்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை கொழும்புத் திட்டம் பிரதிபலிக்கிறது என்றும், சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஒரு முக்கிய தளமாக இலங்கை இதனைத் தொடர்ந்து மதித்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வரலாற்று மைல்கல்லுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கொழும்புத் திட்டம் எதிர்காலத்தில் மேலும் வெற்றிகரமாகச் செயற்பட வாழ்த்தியதுடன், இது பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்கும் செழுமைக்கும் பெரிதும் பங்களிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.


