வீடற்ற, வாடகைக்கு குடியிருப்போரின் தொடர் போராட்டம்: ஜனாதிபதியை சந்திக்கக் கோரி நாளை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வாடகைக்கு குடியிருப்போரின் சங்க உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் நீடித்து வருகின்றது.
தமக்கான நிரந்தர வீட்டு வசதியை கோரியும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்து கலந்துரையாட வாய்ப்புக் கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தோ எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என போராட்டக்காரர்கள் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மாதந்தோறும் 30,000 முதல் 35,000 ரூபாய் வரை அதிக வாடகை செலுத்தி தங்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தாங்கள் அரசாங்கத்திடம் இலவசமாக வீடுகளைக் கோரவில்லை என்றும், செலுத்தும் வாடகைத் தொகைக்கு இணையாக தவணை முறையில் கொள்வனவு செய்யக்கூடிய வகையிலான ஒரு வீட்டுத் திட்டத்தையே கோருவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், வாடகைக்கு குடியிருப்பவர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும், ஐந்து நாட்களாக வீதியில் அமர்ந்து போராடும் தங்களை எவரும் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், எவ்வித தீர்வும் எட்டப்படாததால் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தீர்மானித்துள்ள சங்க உறுப்பினர்கள், நாளை காலை 9.00 மணி முதல் நீர் மற்றும் உணவு ஏதுமின்றி சாகும் வரையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இனம், மத பேதமின்றி தமிழ், முஸ்லிம், சிங்கள என அனைத்து தரப்பு வாடகைக்கு குடியிருப்பாளர்களும் தங்களது வாழ்வாதார உரிமைக்காகவும், பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகவும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள சூழலிலும், தங்குவதற்கு முறையான இடவசதி, மலசலகூட வசதிகள் அல்லது அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வீதியோரத்திலேயே தங்கி தங்களது போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை மிகவும் சுத்தமாகவே பராமரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு ஒரு மந்திரி அல்லது ஒரு ஊடகவியலாளர் கூட நேரில் வந்து தங்களை நேர்காணல் செய்யவில்லை என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 1500 முதல் 2000 வரையான வாடகைக்கு குடியிருப்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும், இதன் மூலமாவது ஜனாதிபதி தங்களுக்கு உரிய தீர்வை வழங்குவார் என நம்புவதாகவும் இச்சங்கத்தினர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.

