தற்போதைய அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழை மக்களின் எண்ணிக்கையை 10 இலட்சத்தால் அதிகரித்துள்ளது!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டில் புதிதாக 10 இலட்சம் ஏழை மக்களை உருவாக்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து வகையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வாட் (VAT) வரியை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அதற்கு நேர்மாறாக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
துன்பங்கள் நிறைந்த இறுதிப் பௌர்ணமி தினம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் கீழ் 18 பௌர்ணமி தினங்கள் கடந்துவிட்ட போதிலும், அவர்கள் நாட்டு மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் செய்யவில்லை என சாடிய அவர், வரும் ஜூலை 01 ஆம் திகதி முதல் மாதமொன்றிற்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக வியாபாரம் செய்யும் அனைத்து வர்த்தகர்களையும் வாட் வரியில் பதிவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கிராமப்புறங்களில் உள்ள சிறிய கடைகளுக்கும் இந்த வாட் வரி விதிக்கப்படும் போது, அந்த வரியை வர்த்தகர்கள் கிராமத்து ஏழை மக்களிடமிருந்தே அறவிடுவார்கள் என்றும், இது அரசாங்கத்தின் அனுசரணையுடன் மக்களின் பாக்கெட்டுகளைப் பறிக்கும் ஒரு பகற்கொள்ளை என்றும் அவர் விமர்சித்தார். மகா திறைசேரியில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாக அரசாங்கம் கூறினாலும், நாட்டு மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படாமல் ஏழைகளின் இறுதிச் சதமும் சுரண்டப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் சுகாதாரத் துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தற்போது பல முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான மருந்து வகைகள் இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாகவும் கூறினார்.

எனினும், சுகாதார அமைச்சரோ அல்லது ஊடக அமைச்சரோ இதைக் கண்டுகொள்வதில்லை என குற்றம் சுமத்திய அவர், தற்போது தினசரி 1,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதோடு, அவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூட இல்லை என்றார். ஜனாதிபதியினால் அதிக நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ‘Clean Sri Lanka’ திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதுடன், தகுதியற்றவர்களை உள்ளூராட்சி அமைப்புகளுக்கு நியமித்ததால் கழிவு மேலாண்மை சீர்குலைந்து, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் அரசாங்கம் திணறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் அரசாங்கம் அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வருவதாகத் தெரிவித்த அவர், தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் லீற்றர் ஒன்றிலிருந்து 125 ரூபாவையும், டீசல் லீற்றர் ஒன்றிலிருந்து 110 ரூபாவையும் குறைக்க முடியும் என்றார்.

துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் விலைக்கே எரிபொருள் தருவோம் என்று தேர்தல் காலத்தில் கூறியவர்கள், இன்று மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதாகவும், வரும் மாத இறுதிக்குள் இந்த விலைக்குறைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் தோல்விகளையும் ஊழல்களையும் மூடிமறைப்பதற்காக அமைச்சர்கள் ஊடகவியலாளர்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட சம்பத் அத்துகோரள, எரிபொருள் விலையைக் குறைக்குமாறு கேட்டபோது பிரதமர் அது “எண்ணெய் கடை அல்ல” எனக் பொறுப்பற்ற விதமாக பதிலளித்துள்ளதாகக் கூறினார்.

மேலும், தொழிற்சங்கத் தலைவர் ரஞ்சன் ஜயலால் எந்த நேரத்திலும் பாய்ந்து தாக்கத் தயாராக இருப்பதாகக் கூறுவதாகவும், அமைச்சர் சரத் நாட்டின் விவசாயிகளை கசிப்பு வியாபாரிகள் மற்றும் மோசடிக்காரர்கள் என்று அவமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் முற்றாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், 1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியைப் போல மக்களை ஒடுக்கவும், அச்சுறுத்தவும், பயமுறுத்தவும் முயற்சிப்பதாகவும், தங்களின் திருட்டுகளை மறைக்கவே இவ்வாறான ஊடக நாடகங்களை அரசாங்கம் அரங்கேற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.