“சுரேஷ் சலே தனது உயிரைப் பணையம் வைத்து தகவல் வழங்குநர்களைப் பாதுகாக்கிறார்” – உதய கம்மன்பில புகழாரம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே, நாட்டின் மிகச்சிறந்த மற்றும் தனித்துவமான ஒரு புலனாய்வு அதிகாரி என்பதை தனது செயல்களின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மொரட்டுவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உலகப் புகழ்பெற்ற நிபுணர்கள் சுரேஷ் சலேயை ஒரு சிறந்த புலனாய்வு அதிகாரி என்று பாராட்டினாலும், இந்த அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், எனினும் தனக்குத் தெரிந்த தகவல் வழங்குநர்கள் (Informers) பற்றிய விபரங்களை தனது சொந்த உயிரைப் பணையம் வைத்தாவது பாதுகாப்பதன் மூலம், தான் ஒரு சிறந்த இராணுவ வீரர் என்பதை அவர் நிரூபித்து வருவதாகக் கூறினார்.

அரசாங்கத்தில் உள்ள சில அரசியல்வாதிகள், சுரேஷ் சலே ஓய்வுபெறும்போது அவரிடமிருந்த அனைத்து புலனாய்வுத் தகவல்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று கூறுவது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது என்று சாடிய முன்னாள் அமைச்சர், 38 ஆண்டுகள் சேவையாற்றிய ஒரு புலனாய்வு அதிகாரி என்ற ரீதியில் அவர் ஒரு பெரிய தகவல் வழங்குநர்களின் வலையமைப்பை உருவாக்கியுள்ளார் என்றும் விளக்கினார்.

மேலும், தகவல் வழங்குநர்கள் அனைவரும் அனைவருக்கும் தகவல்களை வழங்குவதில்லை என்றும், அவர்கள் தாங்கள் நம்பும் குறிப்பிட்ட தனிப்பட்ட அதிகாரியிடம் மட்டுமே தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், அத்தகைய தகவல்கள் குறியீட்டு முறைகள் ஊடாகவே அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கு அனுப்பப்படுகின்றன என்றார்.

தகவல் வழங்குநர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் பற்றிய விபரங்களை அரசாங்கத்திடம் வழங்குவது என்பது, நாட்டின் இரண்டாவது “மில்லேனியம் சிட்டி” காட்டிக்கொடுப்பாகவே அமையும் என உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

கடந்த 2002 மற்றும் 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில், மில்லேனியம் சிட்டி காட்டிக்கொடுப்பின் போது ராணுவ புலனாய்வுப் பிரிவினரின் தகவல் வழங்குநர்கள் பற்றிய விபரங்கள் காவல்துறைக்குக் கசிந்ததால், 73 தகவல் வழங்குநர்கள் மற்றும் யுத்தவீரர்கள் தங்களின் உயிர்களை இழக்க நேரிட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

அத்தகையதொரு துரதிர்ஷ்டவசமான மற்றும் ஆபத்தான நிலைமை இந்த நாட்டில் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சுரேஷ் சலே தனது உயிரைப் பணையம் வைத்து தன்னிடம் உள்ள விபரங்களைப் பாதுகாத்து வருவதாகவும், அவரது இந்தச் சேவைக்கு நாம் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறோம் என்றும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.