உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலேயின் கைது சர்வதேச விசாரணைகளை அவமதிக்கும் ஒரு கேலிக்கூத்து – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகள் முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டு, அரசியல் பழிவாங்கலாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

மொரட்டுவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றும் விசாரணைகளின் தற்போதைய போக்கு குறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI), சர்வதேச இன்டர்போல் (Interpol), ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸ் மற்றும் ஸ்காட்லாந்து யார்டு பொலிஸ் ஆகிய உலகின் முன்னணி சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக மிகவும் தெளிவான முறையில் விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலானது ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதை அந்தச் சர்வதேச அமைப்புகள் அனைத்தும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டிலிருந்து தப்பியோடியவரும், எல்.டி.டி.ஈ (LTTE) மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவருமான அசாத் மௌலானா என்பவரின் போலியான வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, சுரேஷ் சலேயைக் கைது செய்திருப்பது ஒரு கேலிக்கூத்தாகும் என அவர் சாடினார். இந்தச் செயலானது எஃப்.பி.ஐ உள்ளிட்ட சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நடத்திய நம்பகமான விசாரணைகளை முற்றிலும் அவமதிக்கும் மற்றும் கேலிக்குள்ளாக்கும் ஒரு செயலாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அரசியல்மயமாக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் நாடகங்கள் காரணமாக, கத்தோலிக்க திருச்சபை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்தத் கொடூரத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களுக்குப் பாரிய அநீதியை இழைத்து வருவதாக சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

இத்தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்து, 500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள நிலையில், நௌஃபர் உள்ளிட்ட 24 பிரதான சந்தேகநபர்களுக்கு எதிராக 23,000-க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளுடன் கூடிய வழக்குகள் தற்போது நீதிமன்றங்களில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இவ்வாறானதொரு முக்கிய தருணத்தில், அரசியல் லாபங்களுக்காக விசாரணைகள் திசைதிருப்பப்படுவதால், இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டின் புலனாய்வுத் துறையினர் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள ஒட்டுமொத்த நம்பிக்கையும் சீர்குலைந்துள்ளதாக அவர் எச்சரித்தார்.
இதன் விளைவாக, இனிவரும் காலங்களில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் எந்தவொரு அத்தியாவசிய ஒத்துழைப்பும் இலங்கைக்குக் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

மேலும், கொழும்பு ஷங்ரி-லா மற்றும் கிங்ஸ்பரி ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய இப்ராஹிமின் இரு மகன்கள், அவருடன் இணைந்து தற்கொலை செய்துகொண்ட அவரது கர்ப்பிணி மருமகள் மற்றும் குடும்பத்தினர் மூலமாக இந்தத் தாக்குதல்களுக்குப் பாரிய அளவில் நிதியுதவிகள் வழங்கப்பட்ட உண்மை வரலாறுகள் மறைக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இவ்வாறான உண்மைக் குற்றவாளிகள் மற்றும் பின்னணிகள் சுதந்திரமாக இருக்கும்போது, நாட்டுக்காகச் சேவையாற்றிய சுரேஷ் சலே போன்ற அதிகாரிகள் பழிவாங்கப்பட்டு, சிறைச்சாலைகளின் அநீதியான முறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த அநீதியின் காரணமாகவே சுரேஷ் சலே தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் அமைச்சர், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள அநீதிகள் மற்றும் அரசியல் நாடகங்களை நாட்டின் பொதுமக்கள் நன்கு அறிவர் என்றும், சுரேஷ் சலேக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நிச்சயம் சட்டரீதியான நடவடிக்கைகள் கடுமையான முறையில் எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.