ஸ்பா ஊழியர்கள் கைது விவகாரம்: பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அண்மையில் ஸ்பா (Spa) சிகிச்சை நிலைய பெண் ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டபோது, பொலிஸ் நிலையத்தினுள் வைத்து அவர்கள் வீடியோ எடுக்கப்பட்டதாகவும், அவர்களின் அடையாளங்கள் வெளிப்படும் வகையில் அவை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மனித உரிமைகள் சட்ட சங்கம் மற்றும் இலங்கை ஸ்பா சங்கம் ஆகியன இணைந்து இந்த முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இந்த சட்டவிரோத செயலுக்கு பொலிஸாரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த சர்வதேச மனித உரிமைகள் சட்ட சங்கத்தின் சட்டத்தரணி சுசந்த குணவர்தன, அண்மையில் பொலிஸாரால் பெண்கள் சிலர் கைது செய்யப்பட்டபோது அவர்களின் அடையாளங்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் சட்டத்தின் முன்னிலையில் சந்தேக நபர்கள் மட்டுமே எனக் சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள அவமானம் காரணமாக அந்தப் பெண்கள் தற்போது தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கான கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றார். பொலிஸ் அதிகாரிகள் இந்த சட்டத்தை தெளிவாக மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், இதற்கு தமது கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதுடன், இது குறித்து பொலிஸ் மா அதிபரிடமும் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.
இங்கு பெண்களின் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டு, அவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் காட்சிப்படுத்த முடியாது என்பதால் இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
இதேவேளை, இலங்கை ஸ்பா சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ஸ்பா நிலையங்களில் பணிபுரியும் பெண்களை கைது செய்து, அவர்களை விபச்சாரிகள் என சமூகத்தில் பிரசித்திப்படுத்தியுள்ளதாகக் கவலை வெளியிட்டார்.
இதனால் அந்தப் பெண்களால் தற்போது தமது வீடுகளுக்குக் கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நீதிமன்றத்தினால் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் வரை எவரும் குற்றவாளி அல்ல என்பதை நினைவூட்டினார். இலங்கையில் ஸ்பா தொழில் தடை செய்யப்படவில்லை எனக் கூறிய அவர், எனினும் அனைத்து ஸ்பா நிலையங்களையும் விபச்சார விடுதிகள் என முத்திரை குத்த சிலர் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
தற்போது இலங்கையில் பெண் சிகிச்சை வழங்குநர்களை கைது செய்யும்போது, அங்கு மருத்துவர்கள் இருக்கிறார்களா என்று பொலிஸார் தேடுவதாகவும், ஆனால் ஸ்பா செய்வதற்கு மருத்துவர்களோ அல்லது ஆயுர்வேத மருத்துவர்களோ தேவையில்லை என்ற விழிப்புணர்வு பொலிஸாருக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆயுர்வேத நிலையங்களிலேயே மருத்துவர்கள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சிலர் இந்தத் தொழிலையே முற்றாக அழிக்கப் பார்ப்பதாகக் கூறினார். இதற்கு முன்னர், ஸ்பா நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுவதாகக் கூறப்பட்ட போதிலும் அதில் எந்த உண்மையும் இல்லை என்றும், இதனை விபச்சாரம் என்று முத்திரை குத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சுற்றுலாச் சபையின் கீழும் ஸ்பா நிலையங்கள் பதிவு செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், துபாய் போன்ற ஒரு முஸ்லிம் நாட்டிலும் கூட ஸ்பா தொழில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
எனவே, இந்தத் தொழிலை முடக்குவதற்குப் பதிலாக, இதனை முறையாக ஒழுங்குபடுத்தி தருமாறு பல வருடங்களாக தாம் கோரி வருவதாகவும், தற்போதைய அரசாங்கமும் இதனை முறைப்படுத்தி, முறையான ஒரு ஒழுங்குவிதியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்தத் தொழிலை முறையாக நடத்தும் அனைத்துப் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு ஒழுங்காக வரி செலுத்தி வருவதாகவும் இலங்கை ஸ்பா சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க மேலும் தெரிவித்தார்.


