கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு: 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயர்தரத்திற்கு தகுதி; முடிவுகளை மீளாய்வு செய்ய ஜூன் 25 முதல் வாய்ப்பு!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 225,748 பேர் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ள அதேவேளை, பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 7,419 பேர் அதாவது 2.36 சதவீதமானோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இம்முறை கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான சித்தியடைந்த வீதம் மிக உயர்வாகக் காணப்படுவதுடன், இரண்டாம் மொழி பாடத்தில் சித்தியடைந்த வீதமும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பரீட்சார்த்திகள் தங்களுடைய பரீட்சை முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பரீட்சை முடிவுகளுக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ்களையும் ஆன்லைன் முறைமையூடாக இணையத்தளம் வழியே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காக பரீட்சைத் திணைக்களத்திற்கு நேரில் வருகை தர வேண்டிய அவசியமில்லை என்று ஆணையாளர் நாயகம் தெளிவுபடுத்தினார்.

மேலும், பரீட்சை முடிவுகள் குறித்து திருப்தியடையாத மாணவர்கள், தங்கள் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கு ஜூன் 25 ஆம் திகதி முதல் ஜூலை 08 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறையும் தேசிய மட்டத்திலோ அல்லது மாவட்ட மட்டத்திலோ சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களின் விபரங்கள் மற்றும் திறமைப் பட்டியல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடையாள அட்டையைக் கொண்டு செல்லாமை உள்ளிட்ட பரீட்சை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 314 பரீட்சார்த்திகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சை மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழும் சிலரது முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என்றும், உரிய காலப்பகுதியிலேயே முடிவுகள் வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே மேலும் தெரிவித்தார்.