இலங்கையை உலகளாவிய ரத்தின மையமாக மாற்றும் நோக்கில் “Gem City Ratnapura 2026” ஆகஸ்டில்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் ரத்தின மற்றும் நகைத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தி, இலங்கையை உலகளாவிய ரத்தின மற்றும் நகை வர்த்தக மையமாக நிலைநிறுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “Gem City Ratnapura 2026” சர்வதேச ரத்தின மற்றும் நகை கண்காட்சி, 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 02 வரை இரத்தினபுரியில் அமைந்துள்ள Grand Silver Ray Hotel வளாகத்தில் நடைபெறவுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

இன்று (18) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய ஏற்றுமதி துறையாக விளங்கும் ரத்தின மற்றும் நகைத் துறையை ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் போட்டித்திறன் மிக்க துறையாக மாற்றி, அதை இலங்கையின் முன்னணி அந்நியச் செலாவணி வருவாய் ஈட்டும் துறையாக உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

தற்போது ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டிவரும் இத்துறையின் முழுமையான மதிப்புச் சங்கிலியை (Value Chain) உள்ளடக்கும் வகையில் பல கட்டமைப்பு மற்றும் கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாண்டு கண்காட்சி “Home to the Finest” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது. உலகப் புகழ்பெற்ற நீலக்கல் (Blue Sapphire) உள்ளிட்ட பல அரிய ரத்தினங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் இரத்தினபுரியில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுவது விசேட முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மேலும், சர்வதேச ரத்தின மற்றும் நகை கண்காட்சிகளின் உலகளாவிய கால அட்டவணைக்கு (Global Calendar) ஏற்ப இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் கிழக்கு ஆசியாவில் நடைபெறும் சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு கொள்முதல் செய்பவர்கள், அதற்கு முன்னதாக இலங்கைக்கு வந்து நாட்டின் உண்மையான ரத்தினத் துறை அனுபவத்தை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.

2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற கண்காட்சியில் 7,500க்கும் அதிகமான பார்வையாளர்கள் மற்றும் 200க்கும் அதிகமான சர்வதேச கொள்முதல் செய்பவர்கள் பங்கேற்றிருந்தனர். அந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இவ்வாண்டு கண்காட்சி மேலும் விரிவான சர்வதேச பங்கேற்பையும் அதிகளவிலான வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஊடக சந்திப்பில் தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் எஸ். பி. சமிந்த, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, இலங்கை ரத்தின வியாபாரிகள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரியந்த வெலிவத்த, தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையத்தின் ஏற்றுமதி சேவைகள் மற்றும் ஏற்றுமதி சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜி. டி. அமரசிறி உள்ளிட்ட ரத்தின மற்றும் நகைத் துறையைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் துறை பங்குதாரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.