பயன்படுத்திய வாகனங்களுக்கான 15% வரிச்சலுகை நீக்கப்பட்டால் வாகன விலைகள் பாரியளவில் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கான பதினைந்து சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவிற்கு மிக மோசமாக உயரும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…
2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1971/10 இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, அதன் பெறுமதியில் பதினைந்து சதவீத வரிச்சலுகையை அரசாங்கம் வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முதலாவதாக இந்த வரிச்சலுகை ஏன் வழங்கப்பட்டது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர், புதிய வாகனங்கள் மற்றும் பயன்படுத்திய வாகனங்களுக்கு இடையே தற்பொழுது நடைமுறையிலுள்ள வரி விதிப்பு முறைகளையும் ஊடகங்களுக்கு விளக்கினார்.
அவரது கருத்துப்படி, புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது, அவற்றை இறக்குமதி செய்யும் முதன்மை முகவர் நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விலைப்பட்டியல் அடிப்படையிலேயே சுங்கத் திணைக்களம் வரியைக் கணக்கிடுகிறது. இதனை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் சுங்கத் திணைக்களத்திற்கு கூட இல்லை என்பதுடன், அந்த நிறுவனங்களுக்கு உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்த விலைக்கே வாகனங்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, நூறு ரூபாய் பெறுமதியான ஒரு பிஸ்கட் பாக்கெட் உற்பத்தியாளரால் எழுபது ரூபாய்க்கே விற்கப்படும் நிலையில், அதன் மேல் குறிப்பிடப்பட்டுள்ள நூறு ரூபாய் என்பது சந்தையின் அதிகபட்ச சில்லறை விலையாகும். புதிய வாகனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு அந்த எழுபது ரூபாய் போன்ற உற்பத்தியாளரின் மொத்த விலைக்கே வரி கணக்கிடப்படும் போது, எஞ்சிய முப்பது ரூபாய்க்கான வரி அரசாங்கத்தால் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
ஆனால், தனிநபர்களோ அல்லது ஏனைய நிறுவனங்களோ பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, சுங்கத் திணைக்களம் உற்பத்தியாளரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, அதில் உள்ள அதிகபட்ச சில்லறை விலையின் அடிப்படையிலேயே வரியைக் கணக்கிடுகிறது. அதாவது, வெளிநாட்டு ஏலங்களில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கும், இலங்கையில் புதிய வாகனங்களுக்கு நிகரான வரியே விதிக்கப்படுகிறது. இதனால் அரசாங்கத்திற்கு பெருமளவு லாபம் கிடைப்பதாகத் தெரிவித்த அவர், இந்த வரிச்சுமையைத் தாங்க வேண்டிய கட்டாயத்திற்கு நுகர்வோரே தள்ளப்படுகிறார்கள் என்றும், வெளிநாட்டு ஏல விலையுடன் ஒப்பிட்டு அரசாங்கம் வரியை விதித்தால் மக்களுக்கு தற்போதைய விலையை விடக் மிகக் குறைந்த விலையில் வாகனங்களை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பயன்படுத்திய வாகனங்களின் தேய்மானம் அல்லது அவற்றின் பழமையைக் கருத்திற் கொண்டு வரிக் குறைப்பு எதுவும் செய்யப்படுவதில்லை என அரோஷ ரொட்ரிகோ குற்றம் சாட்டினார். உதாரணமாக, பத்து வருடங்கள் பழமையான ‘குளிரூட்டி வண்டி’ (பிரீசர் ட்ரக்) ஒன்றினை வெளிநாட்டு ஏலத்தில் முப்பது இலட்சம் யென் மதிப்பிற்கு வாங்கினாலும், அதன் புதிய வாகனத்தின் விலை நூற்று இருபது இலட்சம் யென்களுக்கும் அதிகமாக இருப்பதால், இலங்கை சுங்கத் திணைக்களம் புதிய வாகனத்தின் விலையான நூற்று இருபது இலட்சம் யென் மதிப்பிற்கே வரி விதிக்கிறது.
இதன்காரணமாக, ஏலத்தில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கினாலும், இலங்கைக்கு கொண்டு வந்து விற்கும் போது அதன் விலை பல மடங்கு உயர்ந்துவிடுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், தற்பொழுது நடைமுறையிலுள்ள பதினைந்து சதவீத வரி வரம்பு நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் அதிரடியாக உயரும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, வெகன் ஆர் ரக வாகனங்கள் சுமார் ஏழரை இலட்சம் ரூபாவினாலும், யாரிஸ் ரக வாகனங்கள் சுமார் பத்து இலட்சம் ரூபாவினாலும், வெசல் ரக வாகனங்கள் சுமார் இருபது இலட்சம் ரூபாவினாலும் விலை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி திருத்தம் அமல்படுத்தப்பட்டால், சந்தையில் ஒரு வெகன் ஆர் வாகனத்தின் விலை சுமார் தொண்ணூறு இலட்சம் ரூபா வரையிலும், வெசல் வாகனத்தின் விலை சுமார் இரண்டு கோடியே இருபது இலட்சம் ரூபா வரையிலும் உயரும் என்பதால், இலங்கையில் சாதாரண நடுத்தர வர்க்க மனிதன் ஒருவனுக்கு வாகனம் வாங்குவது என்பது முற்றிலும் இயலாத காரியமாகிவிடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ மேலும் தெரிவித்தார்.

