2026 உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு சமிந்த்ராணி கிரியெல்ல கோரிக்கை; சூறாவளி நிவாரணப் பகிர்வு மற்றும் அரசியல் சூழல் குறித்தும் விளாசல்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், 2026 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும் தயாராவதற்கும் போதிய கால அவகாசம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த்ராணி கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார்.
இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை 25% என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளதால், உயர்தரப் பரீட்சை என்பது கடுமையான போட்டித் தன்மையைக் கொண்ட ஒன்றாக மாறியுள்ளதுடன், இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், எனவே கல்வி அமைச்சு இந்த விவகாரத்தை மிகவும் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் பாடத்திட்டங்களை நிறைவு செய்ய 27 முதல் 31 மாதங்கள் வரை அவகாசம் இருந்த போதிலும், 2026 மாணவர்களுக்கு வெறும் 21 மாதங்களே கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளில் இன்னும் பாடத்திட்டங்கள் முடிக்கப்படாத நிலையில், பாடத்திட்டங்களை மாத்திரம் அவசரமாக முடிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும், மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களுக்கு முகங்கொடுக்கவும் சுய கற்றலுக்கும் போதிய நேரம் தேவை எனவும் அவர் கூறினார்.
அத்துடன், ‘தித்வா’ சூறாவளிப் பேரழிவு காரணமாக மாணவர்கள் தமது பாடக்குறிப்புப் புத்தகங்களை இழந்துள்ள நிலையில், முதல் முறை பரீட்சை எழுதுபவர்கள் மட்டுமன்றி, 2ஆம் மற்றும் 3ஆம் முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் இம்முறை முடிவுகள் வெளியானதில் இருந்து பரீட்சைக்கான கால இடைவெளி மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, பரீட்சையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரும் தாம், இதனை அரசியல் லாபத்திற்காகக் கூறவில்லை என்றும், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையையே முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேநேரம், ‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான இழப்பீடுகள் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், நாடு தழுவிய ரீதியில் 25 வீதமானோருக்கே இழப்பீடு கிடைத்துள்ளதாகவும், பெருமளவு பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் வெறும் 2-3 சதவீதமானோருக்கே உதவி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 6 மாதக் கொடுப்பனவு முடிவடைந்துள்ள நிலையில், அவர்களின் அடுத்தகட்ட நகர்வு கேள்விக்குறியாகியுள்ளமை அரசாங்கத்தின் பலவீனமான முகாமைத்துவத்தைக் காட்டுவதாக அவர் சாடினார். மேலும், நாட்டில் வறுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கான வற் (VAT) வரியை நீக்குவதாகக் கூறிய அரசாங்கம் அதனை இன்னும் செய்யவில்லை எனவும், மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதியுறுகின்றனர் என்றும் பொக்கிஷம் நிரம்பியுள்ளதாகக் கூறும் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்திய சமிந்த்ராணி கிரியெல்ல, 2024 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பாக 7 அம்சங்கள் அடங்கிய விசாரணை அறிக்கையை பேராயர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்ததாகவும், அந்த வழிமுறைகளைப் பின்பற்றியிருந்தால் உண்மைகளைக் கண்டறிந்திருக்கலாம் என்பதால் இப்போதும் இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாகவும், இரு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு என்பதால் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ள போதிலும், அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாலும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தமது கட்சி தயாராகவே உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

